மக்களவை தேர்தல் பிரச்சாரத்துக்காக ஓரிரு வாரத்தில் தமிழகம் வருகிறாராம் ப்ரியங்கா காந்தி. அதற்கான ஒப்புதலை பெற்று விட்டார் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் கே.எஸ்.அழகிரி. 

தோற்றத்தில் அச்சு அசல் தனது பாட்டி இந்திராகாந்தியை போல் சாயல் கொண்டிருப்பதால் இந்தியா முழுவதும் கிராமப்புற மக்கள் மத்தியில் ப்ரியங்காவுக்கு தனி மவுசு உள்ளது. இதை மனதில் வைத்தே ப்ரியங்காவுக்கு பொறுப்பு வழங்கி, தேர்தல் அரசியலுக்குள் புகுத்தினார் சோனியா. ஏற்கனவே தமிழகத்தில் ஒரு ரவுண்டு அடித்து விட்டு சென்ற பிரதமர் மோடி மீண்டும் நாளை திருப்பூருக்கும், அடுத்த வாரம் கன்னியாகுமரிக்கும் வருகிறார்.

 

இதையடுத்து ராகுலை தமிழகம் அழைத்து வந்து பொதுக்கூட்டம் நடத்த தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்கள் விரும்பினர். அதற்கான ஏற்பாடுகளை திருநாவுக்கரசர் செய்து கொண்டிருந்த போதே, அவரது பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் கே.எஸ்.அழகிரி ராகுலை பிரச்சாரத்திற்கு அழைக்கச் செல்ல, அங்கு அவருக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது போல், ப்ரியங்கா காந்தியும் தமிழகம் வரும் தகவல் உறுதியானதாம்.

 

மனிதர் மகிழ்ச்சியில் திகைத்துவிட்டாராம். ராகுல் பிரச்சாரம் தமிழகத்தில் எடுபடாது என குஷியாக இருந்த தமிழக பாஜகவினர் ப்ரியங்கா வருகை குறித்த செய்தியால் சற்று கலக்கம் அடைந்துள்ளனர். ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி விவகாரத்தில் ப்ரியங்கா மென்மையான போக்கை கடைபிடித்ததும், அவரை சிறையில் சந்தித்து பேசியதும் ஈழத்தமிழ் ஆதராவாளர்கள் மத்தியில் ப்ரியங்காவின் பிம்பம் உயர்ந்திருக்கிறது.

 

கடந்த கால தேர்தல்களில் ராகுல் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டும் மக்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் ப்ரியங்காவின் பிரச்சாரத்தை குறைத்து மதிப்பிட முடியாது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். ப்ரியங்கா காந்தி பேசுவதற்காக தமிழகத்தில் மண்டல அளவிலான பிரச்சனைகள் குறித்து பட்டியலை தயாரித்து வருகின்றனர் காங்கிரஸ் நிர்வாகிகள். இம்மாத இறுதிக்குள் ராகுலும், பிரியங்காவும், தமிழகம் வருவதி உறுதியானதால் அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக தொடங்கியுள்ளன.