மகாபாரதத்தில் துரியோதனிடம் இருந்த அகந்தை பிரதமர் நரேந்திர மோடியிடமும் உள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர்  பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அம்பாலாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரியங்கா பேசும்போது மோடியை விமர்சித்து பேசினார்.
 “தன்னுடைய ஆட்சியில் என்ன மேம்பாட்டு பணிகளைச் செய்தோம் என்பதை பேசாமல் மக்களின் கவனத்தை திசை  திருப்பும் வகையில் மோடி பேசிவருகிறார். அகங்காரமும் அகந்தையும் உள்ளவர்களை யாரும் மன்னிக்கவே மாட்டார்கள். அதற்கு சரியான உதாரணம் மகாபாரதத்தில் வரும் துரியோதனன். துரியோதனன் ஓர் அகந்தை பிடித்தவன். துரியோதனனை  கிருஷ்ணர் திருத்த முயற்சித்தபோதும் அவரையே  தன்வசப்படுத்த முயன்றான். எப்போதும் ஒருவர் வீழ்ச்சியைச் சந்திக்கும் முன்பாக அவருடைய அறிவில் பாதிப்பு ஏற்படும்.


பிரதமர் மோடிக்கு தைரியம் இருந்தால் மேம்பாட்டு பணி, வேலைவாய்ப்பு, விவசாயிகள் பிரச்னை, பெண்கள் பிரச்னை குறித்து பேசட்டும். கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு என்ன செய்தீர்கள்? இனிவரும் காலங்களில் என்ன செய்ய திட்டமிட்டுள்ளீர்கள் என்பதைத் தெரிவிக்க முடியுமா? இதை உணர்ந்து செயல்படாவிட்டால் மக்கள் உங்களுக்கு தக்கப் பாடம் புகட்டுவார்கள்.  
 நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களைக் குறித்து மோடி பேசுகிறார்கள். சில நேரம் நாட்டுக்காக  உயிர் நீத்த எனது குடும்பத்தைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால், அவர்கள் (பாஜக) ஒரு போதும் மக்களின் தேவை குறித்து பேசுவதில்லை. இந்தத் தேர்தல் ஒரு குடும்பத்துடன் தொடர்புடையது அல்ல. இந்தியாவில் உள்ள பல கோடி குடும்பங்கள் தொடர்பானது. அவர்களுடைய ஆசைகள் நம்பிக்கைகள் என அனைத்தையும் பிரதமர் மோடி முறித்துவிட்டார்.” என பிரியங்கா கடுமையாகத் தாக்கி பேசினார்.