2012-ம் ஆண்டில் அதிமுக சார்பில் வென்ற 40 எம்.பி.க்கள் மூலம் மத்திய அரசிடம் இருந்து எந்த ஒரு திட்டமும் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. 40 எம்.பி.க்களும் பாஜகவிற்கு அடிமைகளாக இருந்தனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, வட மாநிலங்களில் மோடி அலை வீசியபோதிலும், தமிழகத்தில் மோடி அலை வீசவில்லை. 

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிபுரியும் பிரதமர் மோடி தமிழக முதலமைச்சர் மற்றும் 39 எம்.பி-.க்களை கண்டு அஞ்சுகிறார் என பிரச்சாரத்தின் போது திமுக எம்.பி. ஆ .ராசா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகினன்றனர். இந்நிலையில், உதகை நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும், அவர்களை அறிமுகம் செய்து வைத்தும் அக்கட்சியின் துணைப் பொது செயலாளர் மற்றும் நீலகிரி எம்.பி. ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, ஆ.ராசா பேசுகையில்;- 2012-ம் ஆண்டில் அதிமுக சார்பில் வென்ற 40 எம்.பி.க்கள் மூலம் மத்திய அரசிடம் இருந்து எந்த ஒரு திட்டமும் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. 40 எம்.பி.க்களும் பாஜகவிற்கு அடிமைகளாக இருந்தனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, வட மாநிலங்களில் மோடி அலை வீசியபோதிலும், தமிழகத்தில் மோடி அலை வீசவில்லை. மாறாக, தமிழகத்தில் 39 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது. தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை அழிக்க முயற்சி செய்யும் பா.ஜ.க.,விற்கு மக்கள் வாக்களிக்கவில்லை. தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பவர்களுக்கு வாக்களித்தனர்.

பிரதமர் மோடி உச்சநீதிமன்றத்தை பார்த்து பயப்படுவதில்லை. ஆனால், தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றம் சென்ற தி.மு.க., எம்.பி.,க்களை பார்த்து மட்டுமே பயப்படுகிறார். இந்திய பிரதமரை கட்டுப்படுத்தும் தகுதி தற்போது தமிழகத்தை சேர்ந்த எம்.பி.,க்களுக்கு மட்டுமே உள்ளது. அனைத்து பிரதமர்களும் நாடாளுமன்ற கூட்டம் நடக்கும்போது வருவது வழக்கம். ஆனால், மோடி நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை. 

கொரோனா பாதிப்பு உச்சகட்டத்தில் இருந்தபோது, அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வெளியில் கூட வரவில்லை. ஆனால், தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியில் வந்து பொதுமக்களை சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறியது மட்டுமின்றி, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தார். தேர்தல் வாக்குறுதியில் கூறிய 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். விரைவில், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும். இன்னும் நான்கு ஆண்டுகள் நான்கு மாதங்கள் ஆட்சி உள்ளது. எனவே, படிப்படியாக அனைத்து வாக்குறுதிகளையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார் என்று ராசா தெரிவித்துள்ளார்.