president election

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கூட்டணி சார்பில் ராம் நாத் கோவிந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவையின் முன்னாள் சபாநாயகர் மீரா குமார் போட்டியிடுகிறார். இருவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், தலித் தலைவர்களுக்கு இடையிலான போட்டியாகப் பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 10 லட்சத்து 98 ஆயிரத்து 903 வாக்குகளில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் கோவிந்த் மூன்றில் 2 பங்கு வாக்குகளை அதாவது ஏறக்குறைய 6.61 லட்சம் வாக்குகளைப் பெறுவார் எனத் தெரிகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தவிர்த்து, ஐக்கிய ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம், அதிமுக, டி.ஆர்.எஸ்., ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஐ.என்.எல்.டி., ஆகிய கட்சிகளும் ஆதரவு கரம் நீட்டியுள்ளன. தேசியஜனநாயக் கூட்டணி சார்பில் 5.27 லட்சம் வாக்குகளும், கூட்டணியில் இல்லாத கட்சிகள் மூலம் 1.33 லட்சம் வாக்குகளும் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமார் ஏறக்குறைய 4.34 லட்சம் வாக்குகளுக்குள் பெறக்கூடும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் 1.73 லட்சம் வாக்குகள் கிடைக்கும்.

காங்கிரஸ் தவிர்த்து ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இந்தகட்சிகள் மூலம் 2.60 லட்சம் வாக்குகள் கிடைக்கலாம்.

எப்படி நடக்கிறது தேர்தல்?

மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டுமே ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முடியும். நியமன எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.எல்.சி-க்களுக்கு வாக்குரிமை இல்லை.

இந்தியா முழுவதும் 4,114 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 776 எம்.பி-க்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கலாம். 1971-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் வாக்குகளுக்கு மதிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு எம்.பி-யின் வாக்கு மதிப்பு 708 ஆகும். எம்.எல்.ஏ-க்களின் வாக்கு மதிப்பு, அந்தந்த மாநிலங்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப மாறும். உத்தரப்பிரதேச எம்.எல்.ஏ-வின் வாக்கு மதிப்பே மிக அதிகம். அது, 208 ஆக உள்ளது. சிக்கிம் மாநில எம்.எல்.ஏ-வின் வாக்குமதிப்பு மிகக்குறைவு. அதன் மதிப்பு, 7.

இதன்படி 776 எம்.பி-க்களின் வாக்கு மதிப்பு 5 லட்சத்து 49 ஆயிரத்து 408. 4,120 எம்.எல்.ஏ-க்களின் வாக்கு மதிப்பு 5,49,474. ஏறத்தாழ இரண்டுமே சமமாக இருக்கும். 50 சதவிகிதத்துக்கும் மேலான வாக்குகளைப் பெற்றவரே வெற்றி பெற்றவராகக் கருதப்படுவார். அதன்படி 10 லட்சத்து 98 ஆயிரத்து 993 வாக்கு மதிப்பில் 5 லட்சத்து 49 ஆயிரத்து 452 வாக்குகள் பெற்றவர் ஜனாதிபதி ஆகலாம்.

தமிழக எம்.எல்.ஏ-வின் வாக்கு மதிப்பு, 176 ஆகும். அ.தி.மு.க. கட்சி ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அந்த கட்சி சார்பில் 56 ஆயிரத்து 808 வாக்குகள் ராம்நாத்துக்கு கிடைக்கும்.

காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் மீராகுமாருக்கு தி.மு.க. கட்சி ஆதரவு அளித்துள்ளது. இந்த கட்சியின் 22 ஆயிரத்து28 வாக்குகள் அவருக்கு கிடைக்கும். பா.ம.க. தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.