Premalatha who takes classes to Vijayakanth

அதெல்லாம் தே.மு.தி.க.வின் பொற்காலம்! தலைமை கழகத்திலிருந்து ஏதாவது ஒரு அறிவிப்பு வருகிறதென்றால் நிர்வாகிகளும், தொண்டர்களும் கொண்டாடுவார்கள். அதேபோல் விஜயகாந்த் தங்கள் மாவட்டத்திற்கு வர வேண்டும் என்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்வார்கள். 

ஆனால் இன்றோ நிலைமை தலைகீழ்!

தே.மு.தி.க.வில் தற்போது இருக்கும் மாவட்ட செயலாளர்களில் அரசியல் ஆளுமையும், பணமும் உடையவர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணி விடலாம். மற்றவர்களெல்லாம் பஞ்சத்திற்கு மா.செ. ஆகியிருக்கிறார்கள் என்று அக்கட்சியினரே நோகின்றனர். இந்நிலையில் தலைமை கழகத்திலிருந்து ஏதாவது அறிவிப்பு வந்தாலே பர்ஸை தடவிக் கொண்டே அதை வாசிக்கிறார்கள் அக்கட்சி நிர்வாகிகள். 

அதேபோல் விஜயகாந்தின் பொது மேடை பேச்சுத் திறமை கடந்த சில வருடங்களாக எந்தளவுக்கு பிரச்னைக்கு ஆளாகியிருக்கிறது என்று யாரும் விளக்க தேவையில்லை. வார்த்தைகளே புரியாமல், முன்னுக்குப் பின் தாறுமாறாக, தெளிவான ஆர்டர் இல்லாமல் என்று ஏகத்துக்கும் பின்னடைவை சந்தித்திருக்கிறது அவரது பேச்சு. அவரது பேச்சை வைத்து ஆயிரக்கணக்கான மீம்ஸ்கள் வந்து தமிழகத்தையே தலைசுற்ற வைத்திருப்பதோடு, ‘தே.மு.தி.க.வினரின் வசதிக்காக கூடிய விரைவில் விஜயகாந்தின் மொழியை விளக்கும் அகராதி வெளிவரும்!’ என்று உச்சகட்டமாக கொளுத்திப்போட்டு அலற வைத்துள்ளனர் இணைய குறும்பர்கள். 

இந்நிலையில்தான் பிரேமலதா ஒரு புதிய முடிவை எடுத்திருப்பதாக தகவல் கசிந்திருக்கிறது. அதாவது தொடர் மருத்துவ உதவிகளின் மூலம் விஜயகாந்தின் உடல் ஆரோக்கியத்தை குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றிவிட்டார் பிரேமலதா. தற்போது அவருடைய பேச்சு விஷயத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறாராம். இதற்காக ஸ்பெஷல் ஸ்பீச் தெரெபிஸ்ட்களை வரவழைத்து அவர்களின் ஆலோசனையை பெற்றிருக்கிறார். தினமும் வீட்டுக்கு வந்து விஜயகாந்துக்கு வகுப்பெடுக்கும் வகையில் ஒரு ஸ்பீச் தெரெபிஸ்டை நியமிக்கவும் செய்திருக்கிறார்களாம் ரகசியமாக. 

தெரெபிஸ்ட் இல்லாத சமயங்களில் பிரேமலதாவே டீச்சராக மாறி கேப்டனுக்கு கிளாஸ் எடுக்கிறாராம். ஆக கூடிய சீக்கிரம் விஜயகாந்த் தனது பழைய நிலைக்கு மாறி ரகளையான மேடைக்கச்சேரி துவங்கும் என்று அக்கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை காட்டுகிறார்கள்.

நம்பிக்கைதானே வாழ்க்கை மக்கழே!