கஜா புயல் பத்து நாட்களுக்கு முன்னர் கரையை கடந்த பிறகு பகலில் திண்டுக்கல் மாவட்டத்தில் சூறாவளி காற்று வீசியது. திண்டுக்கல் மாவட்டத்தின் நத்தம், கொடைரோடு, வேடசந்தூர், கொடைக்கானல், சிறுமலை போன்ற பகுதிகளில் கஜா புயல் நடத்திய கோர தாண்டவத்தில் ஏராளமான விவசாய பயிர்கள் நாசமாகின.

அதிலும் சிறுமலை பகுதியில் மக்கள் வீடுகளை இழக்கும் அளவிற்கு பாதிப்பு இருந்தது. கொடைக்கானல் பகுதியில் புயலால் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு, சுமார் மூன்று நாட்கள் அப்பகுதி மக்கள் தவிக்கும் நிலை உருவானது. தற்போதும் கூட சிறுமலை சுற்றுவட்டார பகுதிகளில் சாய்ந்த மின்கம்பங்கள் சீரமைக்கப்படவில்லை. மரங்களை சாலையில் இருந்து அகற்றும் பணிகளும் முழுமையாகவில்லை.

ஆனாலும் கூட தமிழக அரசு மட்டும் அல்லாமல் தன்னார்வலர்களும் கூட திண்டுக்கல் பகுதிகளை கண்டுகொள்ளவில்லை. நிவாரணப் பொருட்கள் அனைத்துமே தஞ்சை, நாகை, திருவாரூரை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் புயல் பாதிப்பு பகுதிகளில் நிவாரண உதவிகளை வழங்க முடிவெடுத்த தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா நேராக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் கொடைக்கானலுக்கு சென்றார்.

அங்கு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர்களுக்கு பிரேமலதா ஆறுதல் கூறினார். தொடர்ந்து வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு தே.மு.தி.க சார்பிலான நிவாரணப் பொருட்களை வழங்கினார். அப்போது தங்களை யாரும் கண்டு கொள்ளாத நிலையில் முதல் ஆளாக வந்து உதவியிருப்பதாக கூறி மக்கள் சிலர் கண்கலங்கினர்.