மத்தியஅரசு கொண்டுவந்துள்ள ஜிஎஸ்டியால் பல லட்சம் தொழில்கள் அழியும் நிலை உள்ளது. மத்திய அரசு திட்டங்கள் மக்களின் முன்னேற்றுகிறதோ இல்லையோ  அவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கக் கூடாது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பாஜகவை சாடியுள்ளார். 

திருப்பூரில் தேமுதிக சார்பில் வரும் 15 ஆம் தேதி முப்பெரும் விழா நடைபெற உள்ளது.  காங்கேயம் சாலையில் நடைபெற உள்ள, அந்த நிகழ்ச்சிக்காக பொதுக்கூட்ட பொதுக்கூட்ட மேடைக்கு தேமுதிக பொருளார் பிரேமலதா விஜயகாந்த், மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் அடிக்கோல் நாட்டினர்.  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த்,  திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டம் தேமுதிக அரசியலில் பெரும்  திருப்புமுனையாக அமையும் என்றார்.  

வெளிநாடு சென்றுள்ள முதல்வர் பழனிச்சாமிக்கு தேமுதிக வாழ்த்து கூறி வழி அனுப்பியுள்ளது என்றார். நிச்சயம் அவரின் பயணம் தமிழகத்திற்கு பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன் என்றார்.  உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்று  முதல்வர் தெரிவித்துள்ளார் எனவே அதற்கு கழகத்தினர் தொண்டர்கள் தேர்தல் பணிக்கு ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று அப்போது அவர் கேட்டுக்கொண்டார். பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், பொருளாதார வீழ்ச்சி என்பது வேதனை அளிக்கிறது.  மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டுமே தவிற அவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கக் கூடாது என்றார். குறிப்பாக ஜிஎஸ்டி போன்ற மக்களுக்கு புரியாத வரிகளின் மூலம்  பல லட்சக்கணக்கான நிறவனங்கள் தொழில் செய்ய முடியாமல் முடங்கியுள்ளது என்றும் அவர் மத்திய அரசை சாடினார்.

சமீபகாலமாக கூட்டணி கட்சிகளான அதிமுக மற்றம் பாஜக உள்ளிட்ட கட்சிகள் உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு தேமுதிகவை ஒரங்கட்டும் நடவடிக்கைகளில் இறங்கிவிட்டது என செய்திகள் உலா வரும் நிலையில் பாஜகவிற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில்  ஜிஎஸ்டி திட்டத்தை  பிரேமலதா விமர்சித்துள்ளார் என கூறப்படுகிறது.