கூட்டணி கொஞ்சம் பலமாக இருப்பதால் இந்த முறை தமிழகத்தின் ஏதாவது ஒரு மூலையில் யாருக்கும் தெரியாமல் ஒன்றிரண்டு தாமரைகள் மலர்ந்துவிடுமோ என்று யாரும் அச்சப்படத் தேவையில்லை. அவ்வாறு மலர்ந்து விடாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்புடன்  பிரேமலதா விஜயகாந்த்,” புல்வாமா தாக்குதலை இந்தியா மீது தொடுத்ததே பிரதமர் மோடிதான்’ என்று பேசியிருக்கிறார்.

கோவை கணபதி பகுதியில், மக்களவை தேர்தலை ஒட்டி பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா, “புல்வாமா தாக்குதலை நடத்தி ஒரு தைரியம்மிக்க பிரதமராக இந்த உலகுக்கு நிலைநாட்டியவர் பிரதமர் மோடி” என்று பேசினார். இதைக் கேட்ட பி.ஜே.பி.யினர் அதிர்ச்சியில் ஒரு கணம் ஆடிப்போயினர்.

புல்வாமாவில் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலாகோட்டில் தாக்குதல் நடத்தியது என்பதைச் சொல்வதற்குப் பதிலாக புல்வாமா தாக்குதலை பிரதமர் நடத்தியாக  பிரேமலதா உளறியது பிஜேபியினரிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. பிரேமலதாவின் இந்த உளறல் பேச்சு பல தொகுதிகளிலும் தொடர்கிறது.

முன்னதாக கோவை மாவட்டத்தில் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரச்சாரம் செய்த பிரேமலதா தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என சொல்வதற்குப் பதிலாக முரசு சின்னத்தில் வாக்களியுங்கள் எனக் கோரினார். இதேபோல், பொள்ளாச்சியில் கூட்டணி கட்சியான அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரனை ஆதரித்து வாக்கு சேகரித்தபோதும் இரட்டை இலை சின்னத்துக்கு பதிலாக முரசு சின்னத்துக்கே வாக்கு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.