தே.மு.தி.கவின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரேமலதா விஜயகாந்த் அக்கட்சியை ஒரே வாரத்திற்குள் முழுக்கட்டுப்பாட்டிற்குள் எடுத்துள்ளார்.
தே.மு.தி.கவின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரேமலதா விஜயகாந்த் அக்கட்சியை ஒரே வாரத்திற்குள் முழுக்கட்டுப்பாட்டிற்குள் எடுத்துள்ளார்.
கடந்த வாரம் ஞாயிறன்று திடீரென தே.மு.தி.கவின் பொருளாளராக நியமிக்கப்பட்டார் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா. கட்சி ஆரம்பித்து பத்து ஆண்டுகளை கடந்த நிலையில் எந்த பதவியிலும் இல்லாமல் பிரச்சாரம் மட்டும் செய்து வந்த அவருக்கு திடீரென பொருளாளர் பதவி கொடுக்கப்பட்டது. பதவி கொடுக்கப்பட்ட மறுநாளே பிரேமலதா கட்சிப்பணிகளில் தீவிரம் காட்ட ஆரம்பித்தார். முதல்கட்டமாக கட்சியில் காலியாக உள்ள பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமிக்கும் வேலையில் தான் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
தே.மு.தி.கவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றாக கருதப்படுவது மாநில இளைஞர் அணிச் செயலாளர் பதவியாகும். இந்த பதவியில் கட்சி ஆரம்பிக்கப்பட்டது முதல் இருந்தவர் எல்.கே.சுதீஷ். அவரை தே.மு.தி.கவின் துணைச் செயலாளராக நியமித்த பிறகு இளைஞர் அணிச் செயலாளர் பதவி காலியாகவே இருந்தது. ஆனால் அந்த பதவிக்கு எழும்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ஆசைத்தம்பியை நியமித்தார் பிரேமலதா.

தே.மு.தி.க ஆரம்பிக்கப்பட்டது முதல் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று வரும் பிரேமலதாவுக்கு உதவியாக சென்று வந்தவர் ஆசைத்தம்பி. கேப்டனுக்கு எப்படி பார்த்தசாரதி நிழல் போல் இருக்கிறாரோ அதே போல் பிரேமலதாவுக்கு ஆசைத்தம்பி தான் உதவியாளர். இதனால் தான் அவருக்கு மாநில இளைஞர் அணிச் செயலாளர் பதவியை கொடுத்து அழகு பார்த்துள்ளார் பிரேமலதா.
இதே போல் மாணவரணி, மகளிர் அணி போன்றவற்றிலும் காலியாக உள்ள அனைத்து பதவிகளையும் ஒரே வாரத்தில் நிரப்பியுள்ளார் பிரேமலதா. அதோடு மட்டும் அல்லாமல் தினமும் காலையில் கட்சி அலுவலகத்திற்கு வந்துவிடுகிறார். தினமும் ஏதோ ஒரு அணியின் ஆலோசனை கூட்டம் அங்கு நடைபெறுகிறது. அப்போது பிரேமலதா பேசுவதை கேட்டு நிர்வாகிகள் உற்சாகத்தில் துள்ளுகிறார்கள்.

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு நமது வாக்குவங்கியை நிருபித்துவிட்டால் போதும் இழந்த பெருமையை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பெற்றுவிடலாம் என்று அவர் பேசுவதை கேட்டு நிர்வாகிகள் உற்சாகமாக இருக்கிறார்கள். ஆனால் தனக்கென சமூக வலைதளங்களில் பிரத்யேகமாக கணக்கு எதுவும் தொடங்காத பிரேமலதா தனது கணவரின் சமூக வலைதள கணக்குகள் மூலமாகவே தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறார்.
இதன் மூலம் தனது அனைத்து நடவடிக்கைகளையும் கேப்டன் அங்கீகரிப்பது போன்ற ஒரு தோற்றத்தையும் பிரேமலதா ஏற்படுத்தி வருகிறார். எது எப்படியோ பொருளாளர் பதவி ஏற்ற ஒரே வாரத்தில் பிரேமலதா தே.மு.தி.கவை கட்டுப்பாட்டில் எடுத்தது அவரது கட்சியினர் பலருக்கு மகிழ்ச்சியையும் சிலருக்கு உதறலையும் ஏற்படுத்தியுள்ளது.
