அரசியல் போட்டியாளர்களில் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பிரஷாந்த் கிஷோருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது . முழுக்க முழுக்க தங்களது பேச்சாற்றலாலும் ,  மக்கள் செல்வாக்காலும் கட்சிகள் ஆட்சியை பிடித்து வந்த நிலையில் ,  தற்போது  தேர்தல் வியூகங்களால் ஆட்சியை பிடிக்கும் நிலைக்கு  அரசியல் மாறியுள்ளது .  அப்படி வியூகம் வகுத்து ஆட்சியை பெற்றுத் தரும் அளவிற்கு தேசிய அளவில் அரசியல் வியூகம் வகுப்பதில்  வல்லுனராக வளம் வருகிறார் பிரசாந்த் கிஷோர்.  டெல்லியில்  முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ,  பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் என பலருக்கும்  வியூகம் வகுத்து முதலமைச்சர் நாற்காலியில் அமரவைத்தவர் பிரசாந்த் கிஷோர் என நம்பப்படுகிறது . 

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கடும் போட்டி அளித்துவரும் நிலையில்,   எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மம்தாவின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்  பிரசாந்த் கிஷோர் .  கடந்த 2014இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் இரண்டு இடங்களை மட்டுமே வென்ற பாஜக 2019ல் 18  இடங்களை கைப்பற்றி மம்தா பானர்ஜிக்கு கடும் சவால் கொடுத்துள்ளது .  இந்நிலையில் 2021ல் மேற்குவங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது . இதில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டால் மட்டுமே பாஜகவை சமாளிக்க முடியும் என்ற நிர்பந்தம் மம்தாவுக்கு  ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு  தங்களது ஆலோசகராக செயல்படுமாறு  பிரசாந்த் கிஷோரிடம் மம்தா  கேட்டுக்கொண்டார். 

இதனையடுத்து அந்த மாநிலத்தில் வரும் ஏப்ரலில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் மற்றும்  2021ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் வகுக்க பிரசாத் கிஷோருக்கு இந்திய பொலிட்டிகல் ஆக்சன் கமிட்டியுடன் திரிணாமுல் காங்கிரஸ் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது . இந்நிலையில் மேற்கு வங்கத்தில் பிரசாந்த் கிஷோருக்கு அரசியல் போட்டியாளர்களால்  அச்சுறுத்தல் உள்ளதால் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக மம்தா அரசு தெரிவித்துள்ளது . இதன்படி பிரசாந்த் கிஷோருக்கு இரண்டு தனி பாதுகாப்பு அதிகாரிகள் ,பாதுகாப்பு வீரருடன் கூடிய  எஸ்கார்ட் கார் மற்றும் வீட்டுக்கு பாதுகாப்பு போன்றவை வழங்கப்பட்டுள்ளது. பிரஷாந்த் கிஷோர் எங்கு சென்றாலும் உள்ளூர் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அம்மாநிலத்தில் விவிஐபி பாதுகாப்பு பெறும் மூன்றாவது முக்கிய நபராக பிரசாந்த் கிஷோர் கருதப்படுகிறார் .