தென் சென்னை நாடாளுமன்றத் தேர்தலில் ஆரவாரமாகப் போட்டியிட்ட நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் வாங்கிய வாக்குகள் எத்தனை தெரியுமா மக்களே..

 
தென் சென்னை தொகுதியில் இந்தியக் குடியரசு கட்சி சார்பாகபோட்டியிட்டார் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்.  “தான் சினிமா பிரபலம் என்பதால், மக்களிடம் விரைவாக சென்றுவிடுவேன். தமிழகத்தில் எந்தத் தொகுதியில் நின்றாலும் என்னால் வெற்றி பெற முடியும். கட்சி கேட்டுகொண்டதால் தென் சென்னையில் போட்டியிடுகிறேன். அந்தத் தொகுதியில் நான் வெற்றி பெறுவேன்” என்று பவர் ஸ்டார் சொல்லிவந்தார்.
தென் சென்னையில் சில இடங்களில் மட்டுமே பிரசாரம் மேற்கொண்டார். கடந்த 23 அன்று தேர்தல் முடிவு வெளியானது. தென் சென்னை தொகுதியில் 22 சுற்று வாக்குகள் எண்ணி முடித்ததில் பவர் ஸ்டார் வெறும் 665 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். அவருக்கு 5 தபால் வாக்குகளும் கிடைத்தன. மொத்தமாக 670 வாக்குகள் மட்டுமே அவரால் பெற முடிந்தது. ஆயிரத்துக்கும் குறைவாக வாக்குகள் வாங்கி பவர் ஸ்டார் சீனிவாசன் டெபாசிட்டை இழந்தார்.
அதேவேளையில் திண்டுக்கல் தொகுதியில்  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வில்லன் நடிகர் மன்சூரலிகான், தேர்தல் பிரசாரத்தில் பல அலப்பறைகளைச் செய்தார். பரோட்டோ போடுவது. ஷூ பாலீஸ் போடுவது, சட்னி அரைத்து கொடுப்பது, குழந்தையை தாலாட்டுவது என அவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமாக பிரசாரம் செய்தார். திண்டுக்கல் தொகுதியில் மன்சூரலிகான் வாக்காளர்களிடம் சென்று சேர்ந்தார். வாக்கு எண்ணிக்கையின்போது மன்சூரலிகான் 54 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தார். மன்சூரலிகான் டெபாசிட் இழந்திருந்தாலும், ஓரளவுக்கு கவுரவமான வாக்குகளையே பெற்றார். இந்த முறை தமிழகத்தில் திரை துறையிலிருந்து போட்டியிட்ட இரு நடிகர்களும் படுதோல்வியை சந்தித்திருக்கிறார்கள்.