அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக, 7 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. தர்மபுரியில் அன்புமணி, அரக்கோணத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உட்பட 7 பேரும் தோல்வி அடைந்தனர். இதேபோல, தேமுதிகவில் கள்ளக்குறிச்சியில் எல்.கே.சுதிஷ் உட்பட அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட அனைத்திலும் தோல்வி அடைந்தது.

நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல்களில் அதிமுகவின் வாக்கு வங்கி  அப்படியே பாதிக்கு மேலாக சரிந்துள்ளது.மத்தியில் பிஜே கூட்டணி 350 இடங்களை பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. ஆனால் தமிழகத்தில் திமுக கூட்டணி 39 இடங்களில் 38 இடங்களை கைப்பற்றியது. கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு 1 இடம் கூட கிடைக்காத நிலையில், இந்த முறை தேனியை தவிர மற்ற அனைத்து இடங்களையும் திமுக கூட்டணி அபாரமாக கைப்பற்றியுள்ளது.

கடந்த தேர்தலில் அதிமுக 37% வாக்குகளை பெற்றது.இந்த தேர்தலில் அதிமுக 18% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.இதனால் கடந்த முறை வாங்கிய வாக்குகளை விட 18 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை இழந்துள்ளது.இது அதிமுக கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதிமுகவில் படு தோல்வியால் ஜெயலலிதாவின் விசுவாசிகள் கடந்த இரு தினங்களாக துயரத்தில் உள்ளனர். 

ஜெயலலிதாவின் உதவியாளரும் தீவிர விசுவாசியான பூங்குன்றன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவைப் போட்டுள்ளார். அதில், வீறுகொண்டு எழுவோம்!

புரட்சித்தலைவரால் உயிர்ப்பெற்று, 
புரட்சித்தலைவியால் வளர்க்கப்பட்ட இந்த இயக்கத்திற்கு சோதனைகள் புதிதல்ல. நெருப்பாற்றில் நீந்த பயிற்றுவிக்கப்பட்டவர்கள் நீங்கள்.

புரட்சித்தலைவரின் போர்ப்படை தளபதிகளே, தோல்விக்கான காரணங்களை ஆராயுங்கள். தவறுகளை திருத்திகொள்ளுங்கள். அடுத்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற, இறைவன் உங்களுக்கு அனுபவத்தை கொடுத்திருக்கிறார். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மனம் தளராதீர்கள். சோதனைகளே சாதனைகளை படைக்கத்தான். பொதுநலம் பாருங்கள். சுயநலம் பார்க்காதீர்கள். கழகத்திற்காக விட்டுக்கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். நான் பெரியவன், நீ பெரியவன் என்று வசனத்தை பேசிக்கொண்டிருக்காமல், கழகம் வெற்றி பெற பாடுபடுங்கள். வாக்காளர்களுக்கு மறவாமல் நன்றி சொல்லுங்கள்.

தலைவராலும், தலைவியாலும் எஃகு கோட்டையாக வளர்ந்த இயக்கம் இது. தொண்டர்களே! நீங்கள் தான் இதன் காவலர்கள். உங்களால் தான்
இந்த இயக்கம். அம்மா ஆசியால், ஆறுதலான வெற்றி கிடைத்திருக்கிறது. இனிதான், நீங்கள் கவனமாக செயல்படவேண்டும். சிந்தியுங்கள், செயல்படுங்கள். நாளை நமதே!

உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்.. என இவ்வாறு அதில் கூறியுள்ளார்.