அம்மாவிடம் வேலை பார்ப்பது, சிங்கத்திடம் சிக்கி கொண்ட ஆட்டுக்குட்டி போலத்தான், அம்மா அவர்களின் பின்னால் நடந்து வரும் போது நமக்கே கம்பீரமும், மிடுக்கும் வந்துவிடும். அந்த அளவிற்கு ஆளுமை கொண்ட தலைவி நம் புரட்சித்தலைவி என பூங்குன்றன், ஜெயலலிதாவின் கெத்தை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அவரின் பதிவில்; சோதனைகளை சாதனைகளாக்கிய வெற்றிதாய்! எதிர்க்கட்சியாக இருக்கும் போது அம்மா அவர்கள் மிகுந்த கவனத்தோடும், எச்சரிக்கையோடும் கழகத்தை வழிநடத்துவார்கள். தொண்டர்களின் கஷ்டத்தை உணர்ந்திருந்தார் அம்மா. தொண்டர்கள் மீண்டும் கம்பீரமாக நடக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணிப்பார்கள்.

ஆளும் கட்சியாக இருக்கும் போது கட்சி நடத்துவது எளிது. ஏன் என்றால் அதிகாரம் கையில். அதனால் தான், அரசை இயந்திரம் என்று சொன்னார்கள். இதை எளிதில் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், நாம் நல்லாயிருக்கும் போது நம்மை சுற்றி பலர். நாம் நல்லா இல்லை என்றால் நம்முடன் சிலர்.

ஆளுங்கட்சியில் அம்மா அவர்களுடன் பயணித்தை விட, எதிர்கட்சியில் அம்மா அவர்களுடன் பயணித்ததே எனக்கு மகிழ்ச்சியான தருணம். தோல்வியை கண்டு துவளாமல், அம்மா அவர்களின் வெற்றியை நோக்கிய பயணத்தின் பாடங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். சுயநலம் பார்க்காமல், தொண்டர்களின் மகிழ்ச்சியை நோக்கியே அந்த பயணம் இருக்கும். எதிர்க்கட்சியில், அம்மாவிடம் வேலை பார்ப்பது, சிங்கத்திடம் சிக்கி கொண்ட ஆட்டுக்குட்டி போலத்தான். ஆனாலும், அந்த வெற்றி நோக்கிய உழைப்பு மனநிறைவை தந்தது. வெற்றி பெறும் போது அந்த வேதனைகள் காணாமல் போய்விடும். அனைத்தும் நமக்கான பாடமே.

அம்மா அவர்களை சந்திக்க வரும்போது, வேதா நிலையத்தின் கம்பீரத்தை பார்த்து, பாதுகாப்பு கவசத்தை தாண்டி உள்ளே வருபவர்கள், ஒருவித பயத்தோடே வருவார்கள். துப்பாக்கி ஏந்திய காவலர்களை பார்க்கும் போது பயம் தானே பற்றிக்கொள்ளும். ஆனால், அம்மாவை பார்த்துவிட்டு வெளியேறும் போது, அவர்களின் முகத்தில் கம்பீரமும், ஆனந்தமும் தானாக வந்துவிடும். காவல்துறையினரை பார்த்து வணக்கம் வைத்து உள்ளே வந்தவர்கள், வெளியில் செல்லும் போது காவல்துறையினர் இவர்களுக்கு வணக்கம் செலுத்துவதை பார்க்கும் போது திகைப்பே வரும். இதற்கு, காரணம் தேடிய போது, வேதா இல்லத்திற்கு வருபவர்கள், திரும்பிச் செல்லும் போது அந்த அற்புதத்தலைவியின் ஆற்றல் வந்தவர்களையும் ஆட்கொண்டுவிடுகிறது என்பதை உணர முடிந்தது. உணர்ந்தவர்களே அதற்கு சாட்சி.

எதிர்க்கட்சியாக இருக்கும் போது, தேர்தல் பயணங்களில் அம்மா அவர்களுடன் பயணிக்கும் போது, முழங்கும் இந்த பாடல் தொண்டர்களின் ரத்தத்தை சூடேற்றும் என்பதை நான் உணர்ந்த பல தருணங்கள் உண்டு. அம்மா அவர்களின் பின்னால் நடந்து வரும் போது நமக்கே கம்பீரமும், மிடுக்கும் வந்துவிடும். அந்த அளவிற்கு ஆளுமை கொண்ட தலைவி நம் புரட்சித்தலைவி. தொண்டர்களின் இதயத்தை, வெற்றியை நோக்கி அழைத்து செல்லும் அந்த பாடல் வரிகளை கேட்கும் போது, இப்போதும் வீரம் வருகிறது. ஆனால், மனம், அம்மா இப்போது இல்லை என்று சொல்லும் போது, வந்த வீரம் கனநொடியில் மறைந்து, கண்ணீர் பீறிடுகிறது.

"வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
நீதிக்கு இது ஒரு போராட்டம்
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்". என இவ்வாறு பதிவிட்டுள்ளார்.