தி.மு.க தலைவராக பதவி ஏற்ற பிறகு தொடர்ந்து சறுக்கல்களை ஸ்டாலின் எதிர்கொண்டு வருவதால் பரிகார பூஜை செய்வது குறித்து அவரது வீட்டில் ஆலோசனைகள் நடைபெறத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.க தலைவர் கலைஞர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த போது, ஸ்டாலின் தொடர்பாக பாசிட்டிவ் விஷயங்கள் நிறைய வெளியாகின. 

மேலும் கலைஞர் உடல் நலக்குறைவால் ஏற்பட்ட அனுதாபங்களும் ஸ்டாலினுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் பிரியாணி கேட்டு விருகம்பாக்கம் தி.மு.க பிரமுகர் ஹோட்டலில் போட்ட சண்டை மிகப்பெரிய விவகாரமாகிவிட்டது.

இதனை தொடர்ந்து ஸ்டாலின் அந்த ஓட்டலுக்கு நேரில் சென்று வருத்தம் தெரிவிக்கும் நிலையும் உருவானது. பின்னர் கலைஞர் மறைவை தொடர்ந்து ஸ்டாலின் தி.மு.க தலைவரானார். இதில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. 

ஆனால் அழகிரி தொடர்ந்து ஸ்டாலினுக்கு குடைசல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தான் தி.மு.க பிரமுகர் ஒருவர் பியூட்டி பார்லர் பெண் ஒருவரை கொடூரமாக தாக்கிய சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகின. இதுவும் தி.மு.கவிற்கு ஒரு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிட்டது. 

தொடர்ந்து தி.மு.கவினர் ஓசி வடை கேட்டு தகராறு செய்த வீடியோ, திருட்டு வழக்கில் தி.மு.க பிரமுகர் கைதானது, பெட்ரோல் பங்கில் தி.மு.கவினர் தகராறு என்று அந்த கட்சியின் இமேஜை டேமேஜ் செய்யும் வகையிலான செயல்கள் தினந்தோறும் ஒன்றன் பின் ஒன்றாக உருவாகிக் கொண்டே இருக்கின்றன. 

தலைவராக பதவி ஏற்ற பிறகு விழுப்புரத்தில் ஸ்டாலின் பங்கேற்ற பொதுக்கூட்டம் கூட பெரிய அளவில் பேசப்படவில்லை.  இப்படியாக தொடர்ந்து தி.மு.க தொடர்புடைய நெகடிவ் விஷயங்கள் வைரல் ஆவதும், பாசிட்டிவ் விஷயங்கள் எதுவும் எடுபடாமல் போவதும் ஸ்டாலின் குடும்பத்தினரை கவலை அடைய வைத்துள்ளது. 

ஸ்டாலின் மனைவி துர்கா மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்டவர் என்பதுஅனைவரும் அறிந்த ஒன்றே. மேலும் அவர் பூஜை, பரிகாரங்கள் மீதும் நம்பிக்கை கொண்டவர். 

கணவர் தலைவரான பிறகு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிகழும் சம்பவங்களை தடுப்பது குறித்து தனது ஆஸ்தான ஜோதிடர்களை அழைத்து துர்கா பேசியதாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து ஜோதிடர்கள் கூறியுள்ள பரிகார பூஜைக்கான ஏற்பாடு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இவை எல்லாம் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு வரப்படாமல், துர்காவின் நேரடி ஏற்பாட்டில் நடைபெற உள்ளது தனிக்கதை.