நடிகர் கமலஹாசன் குறித்து பொறுப்பற்ற முறையில் பேசுவதை தமிழக அமைச்சர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய மமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை நடத்தி வரும்  நடிகர் கமலஹாசன், கலாச்சாரத்தை சீரழிப்பதாகவும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் தமிழக அமைச்சர்கள் பேசி வருகின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய கமலஹாசன், தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துகிடப்பதாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம், அன்பழகன், செல்லூர் ராஜு, நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை போன்றோர் கமலஹாசனைத் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

அதே நேரத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், வைகோ, சீமான், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கமலஹாசனுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மதுலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அரசியல் கட்சி குறித்து கருத்துத் தெரிவிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு, அதைத் தான் கமல் பேசியிருக்கிறார். அவர் கருத்து சொல்வதில் எந்தத் தவறும் இல்லை என்றார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக அமைச்சர்கள் பேசுவது தேவையற்ற ஒன்று என்றும், பொறுப்பற்ற முறையில் பேசுவதை அமைச்சர்கள் நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கமலஹாசனை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் எனக் கூறுவதே  வன்கொடுமைதான்  என்றும் பொன்னார் தெரிவித்தார்.

பெங்களூரு  சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை வழங்கியது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.