விழுப்புரத்தைப் பொறுத்தவரை திமுக என்றால் பொன்முடி தான், கடந்த 25 ஆண்டுகளாக அந்த மாவட்டத்தில் பொன்முடி கோலோச்சி வருகிறார். அவரைத் தாண்டி யாரும் அந்தப் பகுதியில்  உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் சீட் வாங்கிவிட முடியாது. அந்த அளவுக்கு விழுப்புரம் தொகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

இந்நிலையில் தான் விழுப்புரம் இரண்டாக பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இத்தனை நாளும் பொன்முடியை எதிர்க்க முடியாமல் அடங்கிக் கிடந்த உடன்பிறப்புகள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர்.

இனி பொன்முடியின் தொந்தரவு இருக்காது என்ற மகிழ்ச்சியில் மிதந்த உடன்பிறப்புகளுக்கு ஆப்பு வைத்துள்ளது மக்களவைத் தேர்தல். சென்னை வேளச்சேரியில் வசித்து வரும் பொன்முடியின் மகன் கௌதமி சிகாமணிக்கு திமுக கள்ளக்குறிச்சியில் சீட் கொடுத்துள்ளது.  இதில் திமுகவினர் கொதித்துப் போயுள்ளனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு சொந்தப்பணத்தைச் செலவு செய்தவர் மாவட்ட துணைச் செயலாளர் முத்தையன். இந்த முறை விழுப்புரம் தொகுதி அவருக்குத்தான் என உறுதியாக இருந்த நிலையில் அந்த தொகுதி விசிகவுக்கு போய் விட்டது. இப்படி கட்சிக்காக உழைத்தவர்களுக்கு எந்த மரியாதையும் கிடைப்பதில்லை என்கின்றனர் தொண்டர்கள்.

ஆண்டாண்டு காலமாக கட்சிக்காக உழைத்துச் செத்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு எந்த பலனும் இல்லாத நிலையில் பரம்பரை பரம்பரையாக பொன்முடி குடும்பம் மட்டும் தான் இங்கு வாழணுமா என கேள்வி எழுப்பியுள்ள பல முக்கிய நிர்வாகிகள்  தற்போதே உள்ளடி வேலைகளைத் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. 

இவற்றை எல்லாம் சமாளித்து கௌதம சிகாமணி, மகுடம் சூடுவாரா ? என்பது சந்தேகம் என்கின்றனர் லோக்கல் உடன்பிறப்புகள்.