இந்த ஆண்டு பொங்கலுக்கு, பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலம், உலர் திராட்சை, கரும்பு துண்டு ஆகிய பொருட்களுடன், 1,000 ரூபாய் ரொக்கம், இரண்டு கோடி கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டன. இதற்காக அரசு, 2,250 கோடி ரூபாய்  நிதி ஒதுக்கப்பட்டது. 

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த, மக்களவைத் தேர்தலில், தேனி தவிர்த்து, மற்ற அனைத்து தொகுதிகளிலும், அ.தி.மு.க., தோல்வி அடைந்தது. இருப்பினும், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி; நெல்லை, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளில், சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்றது.

இதனால், உற்சாகம் அடைந்த அதிமுகவினர் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள, உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்துவதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. டிசம்பர் மாத இறுதிக்குள் தேர்தலை நடத்த அதிமுக அரசு முனைப்பு காட்டி வருகிறது.

இந்நிலையில் கடந்த பொங்கலுக்கு, அனைத்து கார்டுதாரர்களுக்கும், 1,000 ரூபாய் ரொக்கம் வழங்குவதாக, அரசு அறிவித்தது. அதே நேரத்தில் வசதியானவர்களுக்கு, அதை வழங்க எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இதனால், எந்த பொருளும் வாங்காத, 50 ஆயிரம் கார்டுதாரர்களுக்கு, ரொக்க பணம் வழங்கவில்லை. பொங்கல் நெருக்கத்தில், பரிசு தொகுப்பை அறிவித்ததால், பொருட்கள் கொள்முதல் மற்றும் வங்கிகளில், ரூபாய் நோட்டுகள் பெறுவதில் சிரமம் ஏற்பட்டது.

வரும் பொங்கலுக்கு, இரு மாதங்கள் இருந்தாலும், தற்போது, உள்ளாட்சி தேர்தல் தேதி, எப்போதும் வேண்டுமானாலும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த பொங்கலுக்கு, 500 ரூபாய் ரொக்கம் மற்றும் பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான வேலைகளில் அரசு இறங்கி உள்ளது. 

இது குறித்த அறிவிப்பை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் வெளியிடுவார் என தெரிகிறது.