கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்கிற அளவுக்கு இலக்கிய ஞானம் கொண்ட தமிழக சூழலை எள்ளி நகையாடும் வகையில் மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனை  அரசு மரியாதையுடன் அடக்கம் செய்கிறது பாண்டிச்சேரி அரசு. இதையொட்டி எழுத்தாளர் பிரபஞ்சன் உடலுக்கு புதுச்சேரி அரசு சார்பில் முதலமைச்சர் நாராயணசாமி  மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தமிழகத்தில் எழுத்தாளர்களுக்கு வாழும் காலத்தில் மட்டுமல்ல செத்த பிறகும் கூட மரியாதை கிடைப்பதில்லை. அவர்களது மரணத்துக்கு அரசியல் தலைவர்கள் ஒரு அறிக்கை கூட விடுவது இல்லை. ஏனெனில் இலக்கியம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்க்கக்கூடிய அளவில்தான் நம் அரசியல்வாதிகளுக்கு இலக்கிய அறிவு இருக்கிறது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு மறைந்த சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் பிரபஞ்சனை கவுரவிக்கும் வகையில் புதுவை அரசு அவருக்கு அரச மரியாதை வழங்கியிருக்கிறது.

இதையொட்டி, ...தமிழகத்தில் வசிக்கும் அனைத்து எழுத்தாளர்களும் புதுவைக்கு இடம் பெயர்வது அவர்களுக்கு நல்லது. இறப்பின்போதாவது அவர்களுக்கான மரியாதை அங்கே கிடைக்கும். தமிழகத்தில் இது போன்ற மரியாதை ஒரு எழுத்தாளனுக்குக் கிடைப்பது காணவே முடியாத விஷயம்.

புத்தகங்களை புரட்டிக்கூட பார்த்திருக்காத கூமுட்டைகள்தான் நமக்கு ஆட்சியாளர்களாக கிடைத்திருக்கிறார்கள். எதிர்காலத்திலும் கிடைப்பார்கள்..! தாமதிக்காமல் இடம் பெயருங்கள் எழுத்தாளர்களே..!எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு அரசு மரியாதை அளித்த புதுவை அரசுக்கு எனது நன்றிகள்..! என்று முகநூல்களில் புதுவை அரசை வாழ்த்தியும் தமிழக அரசை கிண்டலடித்தும் கமெண்டுகள் பறக்கின்றன.