கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் வந்த  மோடிக்கு எதிராக வைகோ தலைமையில் கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.  இந்த போராட்டம் குறித்து பேசிய அவர், பிஜேபிக்கு மோடி ஓட்டுக் கேட்பதை கண்டிக்கவில்லை. பொதுக்கூட்டம் நடத்துவதை கண்டிக்கவில்லை. தமிழகத்திற்கு அவர் செய்த கணிக்க முடியாத பல துரோகங்களை கண்டித்து, கறுப்புக் கொடி என் தலைமையில் காட்டப்படும். இப்போ மட்டுமல்ல எப்போதுமே தமிழகத்திற்கு அரசு விழாவிற்காக எப்போது மோடி வந்தாலும் என் தலைமையில் கறுப்புக் கொடி காட்டப்படும் என வைகோ திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பொன். ராதாகிருஷ்ணன்; விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு, 6,000 ரூபாய் அளிக்கும் திட்டத்தை, 'தேர்தல் சலுகை' என, சிதம்பரம் விமர்சிக்கிறார். காங்கிரஸ் ஆட்சியில், 52 ஆயிரம் கோடி ரூபாய், விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது, எந்த அடிப்படையில் நடந்தது?தமிழகத்தில் மட்டும், 70 லட்சம் விவசாய குடும்பங்கள் பயன் பெறுகின்றன. 

தேர்தலுக்கும், இந்த திட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை.பிரதமர் மோடி, தமிழகத்திற்கு வருகிறார் என்றால், பல ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்களை அளிக்கவே வருகிறார். எனவே, வைகோ தயவு செய்து, கறுப்பு கொடி காண்பிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் எனக் கூறினார். மேலும் பேசிய அவர், கமல்ஹாசன், தன் அணியை, 'ஏ' அணி எனக் கூறுவது, எந்த அர்த்தத்தில் என தெரியவில்லை. சினிமாவுக்கு தான், 'ஏ' மற்றும் 'யு' என சான்றுகள் அளிக்கப்படுகின்றன என இவ்வாறு கூறினார்.