தம்பிதுரை என் சகோதரர், கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கூட்டணி குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என அவர் தகவல் தெரிவித்துள்ளார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன். ராதாகிருஷ்ணன், சில கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக பேசி வருகிறோம். இந்த பேச்சுவாரத்தை நல்ல முறையில் நடைபெற்று வருகிறது.  துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி போராட்டம் நடத்துவது, தேர்தல் வந்துவிட்டது என்பதை காட்டுகிறது. பாஜக தலைவர் அமித்ஷா வருகை, பாஜக தொண்டர்களுக்கு உற்சாகத்தைத் தந்துள்ளது என்றார். 

கூட்டணிக்காக காலில் விழுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கூறியது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், காலில் விழுந்தவர்கள் பலமுள்ளவர்களாக இருக்க மாட்டார்கள் எனத் தெரிவித்தார். மேலும் ஒரு தூணோடு, மற்றொரு தூண் நின்றால் தான் பலம் எனவும், ஒரு தூண் மீது மற்றொரு தூண் விழுந்தால், அது பலம் அல்ல எனவும் கூறினார். 

அவரிடம் மக்களவை சபாநாயகர் தம்பிதுரை பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் கூறுகையில் தம்பிதுரை என் சகோதரர் போன்றவர். அவரிடம் தினமும் பேசி வருகிறேன். எங்களுக்குள் எந்தவித பிரச்சனையும் இல்லை. இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.