கன்னியாகுமரி தொகுதியில் பாஜக - அதிமுக கூட்டணி சார்பில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் களமிறங்கியுள்ளார். திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் வசந்தகுமார் களம் கண்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே போட்டி பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
இந்நிலையில் அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அளித்த ஒரு பேட்டியில், “தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கன்னியாகுமரி தொகுதியில் அமமுக சார்பில் பலவீனமான வேட்பாளரை நிறுத்தும்படி பாஜக தரப்பில் எனக்குக் கோரிக்கை விடப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார். இது, பா.ஜ., தரப்பில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த விஷயத்தில் பாஜகவைச் சேர்ந்த கருப்பு முருகானந்தமே டிடிவி தினகரன் தரப்பை அணுகினார் என்றும் கூறப்படுகிறது. அதிமுக ஓட்டை தினகரன் பிரிக்கும்பட்சத்தில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு குறையும் என்பதால், இந்த உத்தி மேற்கொள்ளப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

 
இந்நிலையில் தினகரனின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். 
 “என்னை பற்றி தினகரன் எதுவும் நேரடியாகக் கூறவில்லை. அந்த விவகாரத்தில் பேசியதாகக் கூறப்படும் கருப்பு முருகானந்தத்துக்கும் தினகரனுக்கும் இடையே பல காலமாக நெருங்கிய நட்பு உள்ளது. வேட்பாளர் தேர்வு குறித்து, என்னை அவர் கேட்டிருந்தால், பலமான வேட்பாளரையே தேர்வு செய்ய சொல்லியிருப்பேன். ஆயிரம் பொய்யைச் சொல்லி, கல்யாணம் நடத்தலாம் என்று சொல்வர்கள். தினகரனோ 10 ஆயிரம் பொய்யைச் சொல்லி தேர்தலை முடிக்கலாம் என்று நினைக்கிறார்.” என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.