பயிர்க்கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை அமைப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் கடந்த  30 நாட்களாக  தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளும் ஆதரவு தெரிவித்து, கலந்து கொண்டுள்ளனர்.

இதே போன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல்  கட்சித் தலைவர்கள் விவசாயிகளை நேரில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.


 
இந்த விவசாளிகளும் எலியை வாயில் கவ்வி பிடித்தும், தலைமுடி மற்றும் மீசையை பாதியாக மழித்தும், மொட்டையடித்தும் பல்வேறு வகைகளில்  போராட்டம் நடத்தினர். 

இந்நிலையில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தை பிரதமர் கண்டு கொள்ளாமல் இருப்பதால் விரக்தியடைந்த விவசாயிகள், பிரதமர் அலுவலகம் அருகே நிர்வாண போராட்டம் நடத்தினர். 

இந்த விவசாயிகளுக்கு ஆதரவு அளிப்பதாற்காக அரியலூரில் இருந்து 50க்கு மேற்பட்ட விவசாயிகள், டெல்லி புறப்பட்டு சென்றனர். இதேபோல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து, ஏராளமானோர் டெல்லி புறப்பட்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை மத்திய அமைச்சர் பொன்,ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்தார். அவர்களது கோரிக்கைகளை பிரதமர் நிறைவேற்றுவார் என உறுதி அளித்தார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் விவசாயிகளின் போராட்டம் உணர்வுபூர்வமானது என்றும் அதனை பாஜக அரசு மதிப்பதாகவும் தெரிவித்தார்.

விவசாயிகள் போராட்டத்தினை கைவிட வேண்டும். மோடி அரசு விவசாய பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

விவசாயிகள் அளித்துள்ள கோரிக்கை மனு பிரதமரிடம் கொண்டு செல்லப்படும். என்றும் விவசாயிகள் மத்திய அரசு மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதியளித்தார்.