பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் 39 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக சரித்திர வெற்றி பெற்றுள்ளது. இத்தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கு.சண்முகசுந்தரம், அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரனை விட 1,75,883 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம் , கிணத்துக்கடவு ,தொண்டாமுத்தூர், வால்பாறை (தனி) ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 15,20,276 வாக்காளர்கள் உள்ளனர். தற்போதைய தேர்தலில் அதிமுக சார்பில் சி.மகேந்திரன், திமுக சார்பில் கு.சண்முகசுந்தரம், அமமுக சார்பில் எஸ்.முத்துக்குமார், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆர். மூகாம்பிகா உள்ளிட்ட 14 பேர் போட்டியிட்டனர். கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.

 

இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் திமுக கூட்டணி 38 இடங்களிலும், அதிமுக கூட்டணி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம் 21 சுற்றுகள் முடிவில் ஒரு லட்சத்து 63 ஆயிரம் 359 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார். அவருக்கு அடுத்ததாக அதிமுக வேட்பாளர் மகேந்திரன் 5,50,905 வாக்குகள் பெற்றுள்ளார். இந்தத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மூகாம்பிகை 59,545, நாம் தமிழர் வேட்பாளர் சானுஷா 31,399 அமமுக வேட்பாளர் முத்துகுமார் 26,631 வாக்குகள் பெற்றுள்ளனர். நோட்டாவிற்கு இந்தத் தொகுதியில் 15,068 வாக்குகள் கிடைத்துள்ளன.

 

 39 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்பாக 1980-ம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு சி.டி.தண்டபானி வெற்றி பெற்றிருந்தார். அதன்பிறகு அதிமுக 6 முறையும், மதிமுக இரண்டு முறையும் தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றிருந்தது.