தி.மு.க.விலிருந்து விலகி வைகோவுடன் ம.தி.மு.க.வுக்கு சென்று, பின் அங்கிருந்து விலகி ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வுக்கு சென்று, அங்கிருந்தும் விலகி தினகரன் நடத்திய அ.ம.மு.க.வுக்கு சென்று, பிறகு அங்கிருந்தும் விலகிவிட்டு ‘இனி இலக்கிய மேடைகளில் மட்டுமே இருப்பேன்’ என்று சத்தியம் செய்துவிட்டு, பின் அதை சர்க்கரைப்பொங்கலாக்கி விழுங்கிவிட்டு மீண்டும் அரசியல் அரங்கில் வலம் வருபவர் நாஞ்சில் சம்பத். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தி.மு.க. தலைமையில் இயங்கும் ம.தி.மு.க.வுக்காக ஸ்டாலின் தரப்பை ஆதரித்துப் பிரசாரம் செய்தார். 

ம.தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.வில் இருக்கும்போது எந்த ஸ்டாலினை மிக மிக கேவலமான முகபாவனைகளின் மூலம் அசிங்கப்படுத்தினாரோ அதே ஸ்டாலினைத்தான் சமீபத்தில் ‘தன்னுடைய கடுமையான உழைப்பால், சரியான திட்டமிடலால், கொள்கை சார்ந்த பயணத்தால் மிக சாதுர்யமாக தமிழக அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியிருக்கிறார்.’ என்று பாராட்டினர் நாஞ்சில்.அந்த வகையில், ஓ.கே! இன்னமும் நாஞ்சிலார் நமக்குதான் ஆதரவாக இருக்கிறார்! என்று தி.மு.க. தரப்பும், வைகோ கோஷ்டியும் அகமகிழ்ந்து இருந்தன. இந்த சூழலில் திடீரென அ.தி.மு.க.வை நோக்கி சம்பத் யூ டர்ன் அடித்திருப்பதாக ஒரு விமர்சனம் எழுந்திருக்கிறது. இது பற்றி பேசும் அரசியல் விமர்சகர்கள் “ஸ்டாலினை பாராட்டுவது போல் பேசிக் கொண்டிருந்த நாஞ்சில் சம்பத், இப்போது திடீரென எடப்பாடியாருக்கு சாமரம் வீசுகிறார். 

அதாவது இப்போது ஒரு பேட்டியில் ‘அ.தி.மு.க. அதிகாரத்தில் இருக்கும் கட்சி. அந்த அதிகாரத்தில் இருக்கும் முதல்வர் பழனிசாமி அதைத் தக்க வைப்பதில் காட்டுகிற ஆர்வமும், அவர் எடுக்கும் நடவடிக்கைகளையும் குறைத்து மதிப்பிட முடியாது.’ என்று சொல்லியிருக்கிறார். 
இதைக் கவனித்துவிட்டுதான் அ.தி.மு.க.வினர், ’ஆக தி.மு.க. டீமின் பிரசார பீரங்கியான நாஞ்சில் சம்பத் மறுபடியும் நம்மை நோக்கி வருகிறார். முதல் தடவை வந்தபோது கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுத்து, ஒரு இன்னோவா காரையும் அம்மா ஜெயலலிதா அவருக்கு வழங்கினார். 

இப்போது நாஞ்சில் சம்பத்துக்கு புது  மாடல் இன்னோவா கார் மீது ஆசை வந்துவிட்டது போல. அதனால்தான் தேர்தல் நேரத்தில் எடப்பாடியாரின் நடவடிக்கைகளை ஆஹா! ஓஹோ! அபாரம்! என்று புகழ துவங்கியுள்ளார். வாங்க நாஞ்சிலு.’ என்று  கலாய்க்கின்றனர்.” என்கின்றனர். 
சரி, புது மாடல் இன்னோவா காரோட விலை என்னப்பா?! எதுக்கும் வெசாரிச்சு வெப்போம்!