தமிழகத்தில் நாளையோடு தேர்தல் பிரசாரம் முடிவடையும் நிலையில், வாக்களார்களுக்கு பண வினியோகத்தை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. பண வினியோகத்தில் புதுமையான பாணியை அரசியல் கட்சிகள் பின்பற்றிவருவதாகவும் கூறப்படுகிறது.

 
வருமான வரி ரெய்டு, பறக்கும் படை எனத் தேர்தல் ஆணையம் எதை செய்தாலும் வாக்காளர்களுக்கு பணம் தருவதை மட்டும் தமிழகத்தில் நிறுத்த முடியவில்லை. தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை நிறுத்துவதும், தேர்தலை நடத்துவதும் மிகவும் சிரமம் என்று தேர்தல் ஆணையம் சொல்லும் அளவுக்கு இங்கே உள்ள பிரதான அரசியல் கட்சிகள் தமிழகத்துக்கு பெருமை தேடி தந்துள்ளன. 
தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் கோடிக்கணக்கில் பணமும் தங்க, வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தலுக்கு இன்னும் மூன்று தினங்களே உள்ளதால், அதிகாரிகளின் கண்ணில் மண்ணை பூசிவிட்டு வாக்களார்களுக்கு பண வினியோகம் செய்யும் பணியை அரசியல் கட்சிகள் சிறப்பாகவே செய்துவருகின்றன. திருமங்கலம், ஸ்ரீரங்கம் தேர்தல் பார்முலாவை விஞ்சும் வகையில் கட்சிகள் புதிய பாணியில் பண வினியோகம் செய்யும் முறையைப் பின்பற்றிவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கையில் பணமிருந்தால் பறக்கும் படையினர் பிடிப்பார்கள் என்பதால், 3 ஆயிரம், 5 ஆயிரம் என மிகச் சொற்பமானப் பணத்தை கையில் வைத்துக்கொண்டு விரைவாகப் பண வினியோகம் நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. அப்படியே மாட்டினாலும், கையில் குறைந்த பணமே இருப்பதால், எளிதாகத் தப்பிக்கவும் சம்பந்தபட்டவர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 
தமிழகத்தில் பிரதான கட்சி ஒன்று, 39 தொகுதிகளிலும் பணப் பட்டிவாடா செய்வதற்கான எல்லா பணிகளையும் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. கூடல் நகரில் ஆயிரம் வாக்காளர்களுக்கு 5 பொறுப்பாளர்கள் வீதம் நியமிக்கப்பட்டு பண வினியோகம் நடைபெற்றுவருவதாகக் கூறப்படுகிறது. கவர் எதையும் பயன்படுத்தாமல், பேசுவதைப் போல பாவ்லா காட்டிக்கொண்டு வாக்காளர் கையில் பணத்தைத் திணித்துவிட்டு வந்துவிடுவதாகவும் சொல்லப்படுகிறது. துரித கதியில் குறைந்த பணத்தை வைத்துக்கொண்டு நடக்கும் இந்தப் பண வினியோகத்தைக் கண்டுபிடிப்பதில் அதிகாரிகள் திணறிவருவதால், இந்த ரூட்டையே எல்லா இடங்களிலும் அரசியல் கட்சிகள் பின்பற்றத் தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
நாளையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைய இருப்பதால், அரசியல் கட்சிகளின் சார்பில் பண வினியோகம் இன்னும் அமோகமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.