அரசியல் நெடியுடன் கூடிய போஸ்டர்களுக்கு ரசிகர் மன்ற மேலிடம் கொடுத்த அனுமதியால் அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன தங்கள் தலைவரின் பிறந்த நேற்று கொண்டாடியுள்ளனர்.
 
மதுரையில் நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அதற்கு முதல் நாளே போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில் விஜயை அரசியலுக்கு வர வேண்டும் என்கிற ரீதியில் வாசகங்கள் இடம் பெற்று இருந்தன. மேலும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வரிசையில் தமிழகத்தை காப்பாற்றப்போவது விஜய் தான் என்கிற ரீதியில் அந்த போஸ்டர்கள் இருந்தன. விஜய் நேற்று பிறந்த நாள் கொண்டாடிய நிலையில் இந்த போஸ்டர்கள் கடந்த சனிக்கிழமையே மதுரையில் ஒட்டப்பட்டன.

இந்த போஸ்டர்கள் அதிக கவனம் பெற்றது. சமூக வலைதளங்களில் வைரலானது. சில ஊடகங்களும் இந்த போஸ்டர்களையே செய்தியாக்கின. இதனை தொடர்ந்து இதே பாணியில் மாற்ற மாவட்டங்களில் மறுநாளும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. சொல்லப்போனால் விஜய் பிறந்த நாளன்று ஒரு அரசியல் வாதிக்கு கொடுக்கும் வாழ்த்தை போல, பிரபல நாளிதழில் முதல் பக்கத்தில் விளம்பரம் கொடுக்கப்பட்டது. கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்களே தங்கள் பிறந்த நாளை பெரிய அளவில் கொண்டாடவில்லை.

ஆனால் நடிகரான விஜய் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் இந்த அளவிற்கு ஆர்ப்பட்டமாக கொண்டாடியது தான் பல தரப்பிலும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. ஏனென்றால் விஜய் ரசிகர் மன்றம் மிகவும் கட்டுப்பாடு மிக்கது. உதாரணத்திற்கு தமிழகத்தில் அதிமுக ஜெயலலிதா இருந்த போது எப்படி செயல்பட்டதோ, அதே போலத்தான் விஜய் ரசிகர் மன்றத்தை அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடத்தி வருகிறார். விஜய் பிறந்த நாளுக்கு மட்டும் அல்ல அவரது படம் ரிலீஸ் சமயத்தில் கூட எந்த மாதிரி போஸ்டர் அடிக்க வேண்டும், எப்படி பிளக்ஸ் வைக்க வேண்டும், கட்  அவுட்டுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை ரசிகர் மன்ற மேலிடம் சொல்லிவிடும்.

இதனை பின்பற்றியே ரசிகர்கள்போஸ்டர்கள் அடிப்பர். மேலும் போஸ்டர்கள் தொடர்பாக விஜய் ரசிகர் மன்ற மேலிடத்திலும் அனுமதி பெற வேண்டும். கடந்த சர்க்கார் பட விவகாரத்திற்கு பிறகு விஜய் படம் வெளியாகும் போது அரசியல் ரீதியிலான வாசகங்களை மேலிடம் தவிர்க்குமாறு கூறியது. இதனை அடுத்து அதனை விஜய் ரசிகர்கள் தவிர்த்து வந்தனர். ஆனால் பிறந்த நாள் சமயத்தில் முழுக்க முழுக்க அரசியல் வாசகங்களுடன் அடிக்கப்பட்ட போஸ்டர்களின் பின்னணி தான் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

எம்ஜிஆர், ரஜினி வரிசையில் விஜயை ஒரு மாஸ் ஹீரோவாக தங்கள் ரசிகர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ரஜினி அரசியலுக்கு வராத நிலையில் விஜய் நிச்சயமாக அரசியலுக்கு வருவார் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். மேலும் விஜயின் தந்தை அவ்வப்போது அவரது அரசியல் பிரவேசம் குறித்து மறைமுகமாக சில கருத்துகளை கூறக்கூடியவர். அதோடு மட்டும் அல்லாமல் விஜய் தனது படங்களில் தவறாமல் அப்போதைய அரசியல் சூழலை விமர்சிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

இதனை எல்லாம் கூட்டிக் கழித்து தான் விஜய் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் நம்புகிறார்கள். இந்த சூழலில் அரசியல் ரீதியிலான போஸ்டர்களுக்கு ரசிகர் மன்ற மேலிடம் அனுமதி கொடுத்துள்ளது, அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் வர இருப்பது போன்றவற்றை முடிச்சி போட்டு இப்போதே எம்எல்ஏ கனவில் சில நிர்வாகிகள் மிதக்க ஆரம்பித்துள்ளனர். இதற்கு எல்லாம் தூபம் போடும் வகையில் ரசிகர் மன்ற மேலிடம் அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.