தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜனின் அரசியல் பயணத்தை பார்ப்போம்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரி ஆனந்தனின் மகள் தமிழிசை. நாகர்கோவிலில் பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்தில் குமரி ஆனந்தனுக்கு முதல் குழந்தையாக பிறந்தவர் தமிழிசை. 

சென்னை மருத்துவ கல்லூரியில் மருத்துவப்படிப்பை முடித்தார் தமிழிசை. பின்னர் எம்ஜிஆர் மருத்துவ கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பை முடித்தார். தமிழிசையின் கணவர் சௌந்தரராஜனும் ஒரு மருத்துவர் ஆவார். தமிழிசையின் தந்தை குமரி ஆனந்தன், தீவிர காங்கிரஸ்காரர் என்றபோதிலும், அதைப்பற்றி கவலைப்படாமல் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டு கட்சி பணியாற்றி உயர்ந்தவர் தமிழிசை. 

தமிழிசையை பாஜகவில் சேர உத்வேகப்படுத்தியது அவரது கணவர் சௌந்தரராஜன் தான். 1999ல் பாஜகவில் உறுப்பினரானார் தமிழிசை. ஒரு மருத்துவராக கெத்தாக வாழ்ந்துவந்த தமிழிசை, பாஜகவில் அடிப்படை உறுப்பினராக இருந்து, மாவட்ட தலைவர் போடும் உத்தரவுக்கு செவிமடுத்து கட்சி பணியாற்றினார் தமிழிசை. 

தமிழிசை பாஜகவில் இணைந்ததால் அவரது தந்தை குமரி ஆனந்தன் அவர் மீது அதிருப்தியும் கோபமும் அடைந்தார். பாஜகவிலும் யாரும் தமிழிசையை நம்பவில்லை. ஆனால் இதற்கெல்லாம் அசராத தமிழிசை, தனது நேர்மையான செயல்பாட்டாலும் கடுமையான உழைப்பாலும் சொந்த கட்சியினரின் நம்பிக்கையை பெற்றார்.

கட்சி தலைமையின் நம்பிக்கையை பெற்றிருந்தாலும் மக்களை சந்தித்து அவர் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வியே அடைந்தார். 2006, 2011 சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு தோற்றார் தமிழிசை. அதேபோல, 2009ம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டபோதும் தோல்வியே அடைந்தார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கூட தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு கனிமொழியிடம் தோற்றார். 

2014ம் ஆண்டிலிருந்து தமிழக பாஜகவின் மாநில தலைவராக இருந்துவருகிறார் தமிழிசை. ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு ஆகிய விவகாரங்களில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக தமிழகம் கொந்தளித்த காலக்கட்டங்களில், தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசையின் தலைதான் உருண்டது. ஆனால் அவற்றையெல்லாம் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் எதிர்கொண்டவர் தமிழிசை. மிகவும் சென்சிட்டிவான விவகாரங்களில் பாஜகவின் நிலைப்பாட்டையும் விட்டுக்கொடுக்காமல், அதேநேரத்தில் தமிழக மக்களின் மனநிலைக்கு எதிராகவும் இருந்துவிடாமல், அந்த விவகாரங்களை கையாண்டார். ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் எழுப்பும் எந்த கேள்விக்கும் மறுப்போ தயக்கமோ இல்லாமல் பதிலளிக்கக்கூடியவர்.

மக்களை சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் மக்கள் தனக்கு தோல்வியை பரிசளித்தாலும், தோல்வியால் துவண்டுவிடாமல் கட்சி பணியையும் மக்கள் பணியையும் தொடர்ந்தவர் தமிழிசை சௌந்தரராஜன். இந்தியாவில் ஒரு மாநிலத்தின் பாஜக தலைவராக இருக்கும் ஒரே பெண் தமிழிசைதான். தற்போது தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதால், தமிழக பாஜக பதவியிலிருந்து விலகிவிடுவார். ஆனால் 5 ஆண்டுகாலம் பாஜகவின் மாநில தலைவராக, பல இக்கட்டான மற்றும் நெருக்கடியான சூழல்களில் திறம்பட செயல்பட்டிருக்கிறார் தமிழிசை சௌந்தரராஜன். 

தமிழிசை சௌந்தரராஜன் பாஜகவிற்காக கடுமையாக உழைத்தும் கூட, தேசிய அளவில் அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற கருத்து பரவலாக இருந்தது. இந்நிலையில், தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் தமிழிசை சௌந்தரராஜன். இந்த பதவி தமிழிசைக்கு எளிதாக கிடைத்துவிடவில்லை. அதற்கு பின்னால் கடுமையான உழைப்பு இருந்திருக்கிறது.