*    ஆட்சிகாலத்தின் இறுதியாண்டில் இருக்கும் மோடி அரசு, ராகுலை விடவும் மாஜி மத்தியமைச்சர் ப.சிதம்பரத்தின் மீதுதான் ஏக கடுப்பில் இருக்கிறது என்பது தேசமறிந்த ரகசியம். வழக்குகள், கைது முகாந்திரம் எனும் கடும் நெருக்கடிகளுக்கு இடையிலும் கூட ரெகுலர் அரசியலில் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார் ப.சி. அந்த வகையில் இப்போது ”கஜா புயலின் சுவடு மறையும் முன்பாக மத்திய அரசு குழுவினர் வந்து பார்வையிட வேண்டும். அப்போதுதான் உண்மை சேதம் புரியும். இது தொடர்பாக, மத்திய அரசின் உள்துறை செயலர் ராஜீவ் கவுபாவிடமே பேசினேன், அவர் அதிகாரிகளை உடனடியாக அனுப்பி வைக்க, ஆவன செய்வதாக கூறினார். நானும் அதை நம்புகிறேன்.” என்று சொல்லியுள்ளார். 
(க்கும், கவுபாவுக்கு கட்டம் சரியில்ல. ப.சி.ட்ட பேசினதுக்காகவே அவருக்கு ரிவிட் வைக்க போறாங்க.)

*    ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி கமிஷன் சசிகலாவிடம் விசாரணை நடத்திட, பரப்பன சிறைக்கே நேரில் சென்று கேள்விகளை கேட்டிடுவதற்கான மூவ்களில் இறங்கியுள்ளது! என செய்திகள் வெளியாகியுள்ளது. 
(சின்னம்மா! கன்னடத்துல பதில் சொல்லாதீங்கோ, தமிழ்லேயே டீல் பண்ணுங்க.)

*    உடல் நலன் விஷயத்தில் தொண்டர்கள் வருத்தப்படுமளவுக்குதான் விஜயகாந்தின் நிலை உள்ளது. ‘சும்மா தலைவரை வீட்டிலேயே உட்கார வைக்காம, அடிக்கடி வெளியே கூட்டிட்டு வாங்க அண்ணி. எங்களையெல்லாம் பார்த்தா ரொம்ப உற்சாகமாகி கூடிய சீக்கிரம் சரியாகிடுவார் தலைவர்.’ என்று கோரிக்கை வைத்துள்ளனராம் தலைமை நிர்வாகிகள். 
(அப்டியே பொள்ளாச்சி பக்கமா வாய்க்கா, வரப்புன்னு கூட்டியாந்து ‘ஏனுங்க சின்னக்கவுண்டரே!’ன்னு கூப்பிட்டு பாருங்க, கேப்டன் கில்லியாகிடுவாப்ல.)

*    வரும் வாரம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடக்க இருக்கும் காங்கிரஸின் பெரும் விழா ஒன்றுக்கு கம்யூனிஸ்ட்டுகள், விடுதலை சிறுத்தைகள் ஆகியோரை அழைத்திருப்பவர்கள் தி.மு.க.வுக்கு மட்டும் அழைப்பு வைக்கவில்லை என்று ஒரு தகவல் பரவி உள்ளது. 
(துரைமுருகண்ணே, இதுக்காகவே ஒரு சீட்டை கம்மி பண்ணுங்கண்ணே அந்த காங்கிரஸுக்கு)

*    கட்சிப் பதவிகளில் அதிகளவில் பெண்கள் வரவேண்டும், கருத்துக்களை தெரிவிக்கும் உரிமை தி.மு.க.வில் பெண்களுக்கு உள்ளது! என்று மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி கூறியுள்ளார். 
(அஹா! அச்சரா! அக்கா எப்படி போட்டாங்க பார்த்தீயா கர்ச்சீப்ப. நாடாளுமன்ற தேர்தல் நெருங்குது, தி.மு.க தன்னோட கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு ஆலோசனைகளை ஆரம்பிச்சிருக்கிற நேரத்துல தனக்கும் கோட்டா ஒதுக்கி, தன் ஆதரவு ஆட்களுக்கும் சீட் கொடுக்கணும்னு அம்சமா கேட்டிருக்காங்க பாருங்க.)