*    மேடைகளில் குறிப்பு சீட்டு வைத்துக் கொண்டு பேசினால் என்ன தப்பு? சீட்டை வைத்துக் கொண்டு மக்களுக்கான உண்மையை தலைவர் ஸ்டாலின் பேசுகிறார். ஆனால் சீமானோ வெறும் கையுடன் பொய்களை மட்டுமே பேசுகிறார்: தமிழன் பிரசன்னா. 

(அதாவது பூ-வை பூ-ன்னும் சொல்லலாம், புய்ப்பமுன்னும் சொல்லலாம், நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம். புய்ப்பமுன்னு சொன்னாலும் பூ வாசமடிக்கத்தான் செய்யும்)

*    என்னைப் பொறுத்தவரையில் மூன்றாவது அணி என்பது  வேஸ்ட். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் ஸ்டாலின் சந்திப்பை ஒரு சடங்காகவே பார்க்கிறேன். இதனால் எதுவும் நடக்கப்போவதில்லை: பிரேமலதா. 

(அது கெடக்கட்டும் அண்ணி. கேப்டனுக்கு காலையில மாத்திரையெல்லாம் கொடுத்தீங்களா?  எலெக்‌ஷன் ரிசல்ட்டுக்கு அப்புறம் மறுக்காவும் அமெரிக்காவுக்கு போக போறீகளாமே! அப்ப இதுவரைக்கும் போனதெல்லாம் வேஸ்ட்டாண்ணி?
ஆமா சந்திரசேகர் ராவ் - ஸ்டாலின்னு ஏதோ...)

*    வாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைப்பிடித்தவர் காந்தி. ஆனால் எந்த ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்காத கமல், தன்னை காந்தியின் கொள்ளுப் பேரன் என சொல்ல எந்த தகுதியும் இல்லாதவர்: தமிழிசை. 

(தோழர் ராசேந்திர பாலாஜிக்கே சவால் விட்டு நம்மவரை நாலு சந்திக்கு நட்ட நடுவுல விட்டு, கலா மாஸ்டர் ரேஞ்சுக்கு ச்சும்மா  கிழி கிழின்னு கிழிப்பீங்க போலிருக்கே இசையக்கா?)

*    கருணாநிதியால் செய்ய முடியாததை ஸ்டாலினால் எந்த காலத்திலும் செய்ய முடியாது. குறுக்கு வழியில் அவரால் முதல்வராக முடியாது: பன்னீர்செல்வம். 

(ஆமாண்ணே நாம இதுவரைக்கும் குறுக்கு வழியில இல்லாம ஸ்ட்ரெயிட்டா மக்களே ஓட்டு போட்டுதானே முதல் மந்திரி ஆனோம்? ஏம்ணே கடுப்பு வர்ற மாதிரி ஜோக்கடிக்கிறீங்க. அப்புறம் சந்தடி சாக்குல கருணாநிதியை புகழ்றீங்களே, என்ன விசேஷம்?)

*    ஐந்து சவரன் வரை நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதை பெண்கள் நன்கு புரிந்து கொண்டு தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும்: வைகோ. 

(தள்ளுபடியை உங்க அளவுக்கு யாராலண்ணே புரிஞ்சுக்க முடியும். தேர்தல் வெற்றிக்காக கொள்கையை தள்ளுபடி பண்ணுனீங்க, கோட்பாட்டு சித்தாந்தங்களை தள்ளுபடி பண்ணுனீங்க, தி.மு.க. கூட்டணியில் போய் கலந்து ஸ்டாலினின் பி.ஆர்.ஓ.வாக மாறி உங்களோட கெத்துவையும் தள்ளுபடி பண்ணிட்டீங்களேண்ணே?)