கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் குற்றங்கள் குறைந்து மக்கள் அமைதியாக வாழவும்  நீர்வளம் செழித்து விவசாயம் தழைத்தோங்க வேண்டியும் காவல்துறை மற்றும் பொதுப்பணி துறையினரும் விரதமிருந்து முருகனுக்கு காவடி ஏந்தி நேர்த்தி கடன் செய்யும் பாரம்பரிய நிகழ்வு நடைபெற்றது. 

கன்னியாகுமரி மாவட்டம் பண்டைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திக் கீழ் இருந்தபோது ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையன்று, குற்றங்கள் குறைந்து மக்கள் அமைதியாக வாழவும் நீர்வளம் செழித்து விவசாயம் தழைத்தோங்கவும் பாரம்பரியமாக வருடா வருடம் தக்கலை காவல் துறை மற்றும் பொதுப்பணித்துறையினர்  விரதமிருந்து குமாரக்கோயில் முருகன் கோயிலுக்கு காவடி ஏந்தி சென்று நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம். 

இந்த ஆண்டின் கார்த்திகை கடைசி வெள்ளியான இன்று தக்கலை காவல் நிலையத்திலிருந்து போலீசாரும் காவல் துறை அதிகாரிகளும் காவடி பவனியுடன் சென்றனர். அதுபோல், மழை பெய்யவும் நீர் வளம் செழிக்கவும் விவசாயம் எவ்வித குறையும் இல்லாமல் சிறப்பாக நடைபெறவும் பொதுப்பணி துறை அதிகாரிகளும் ஊழியர்களும் தக்கலை பொதுப்பணித் துறை அலுவலகத்திலிருந்து பாரம்பரியாமாக  பின்பற்றி வரும் இந்த நடைமுறையையொட்டி, இன்று  காவடி பவனி சென்றனர். 

கொரோனா விவகாரத்தால் காவடி பவனியில் பங்கேற்றவர்கள் முகக்கவசம் அணிந்து சென்றனர். வழக்கமாக அதிக அளவிலான பொதுமக்கள் காவடி பவனி அனுமதிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு குறைவான பொதுமக்களே பவனி செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதிகாரிகளும் போலீசாரும் காவடி பவனி செல்வது தமிழகத்தில் வேறு எங்கும் காணப்படாத நிகழ்வு என்பது குறிப்பிடதக்கது.