Police Shoot in Tutucorin Protest - GV Prakash condemned

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது ததுப்பாக்கி சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று நடிகர் ஜிவி பிரகாஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் சுற்றுவட்டார கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போலீசார் தடுப்பையும் மீறி போராட்டக்காரர்கள், ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போராட்டக்காரர்கள், காவல் வாகனத்தைக் கவிழ்த்தும், கல்லெறிந்தும் நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கானோர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள் நுழைந்தனர். போரட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலக வாயில் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதால் பதற்றம் ஏற்பட்டது. 

இதனால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வந்த நிலையில் மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து 2,000 போலீசார்
தூத்துக்குடிக்கு விரைந்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதுபோலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுக
செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யக் கட்சி தலைவர் கமல் ஹாசன் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மக்கள் போராடுவதற்கு தடை விதிக்க முடியாது என்பதால், தங்கள் உரிமைக்காக
அமைதி பேரணி சென்ற எம் மக்கள் மீது தடியடி, துப்பாக்கி சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கதக்கது.

சில நூறு பேர் கொண்ட உங்களுக்கு முன்னால் நிற்கும் பல்லாயிரக்கணக்கான எம் மக்களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும்... வரலாற்று
பிழை செய்து விட்டீர்கள் என்று ஜி.வி.பிரகாஷ் பதிவிட்டுள்ளார்.