ஊழல் மற்றும் வருமானி வரி ஏய்ப்பு வழக்கில் 15 க்கும் மேற்பட்ட அமைச்சர்களை கைது செய்து, தமிழக அரசை  கலைக்கப் போவதாக பரவி வரும் தகவலை அடுத்து, ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா புகாரை அடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரிடம் வருமான வரி துறையினர், 35 இடங்களில் சோதனை நடத்தினர். தேர்தலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்று சென்னை நுங்கம்பாக்கம் வருமானவரி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி, அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

மேலும், ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள, மணல் மன்னன் சேகர் ரெட்டி அளித்த வாக்கு மூலம் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள், சிக்கியுள்ள ஆவணங்களின் அடிப்படையில், மேலும் 15 அமைச்சர்கள் வசமாக சிக்கியுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து, ஊழல் மற்றும் முறைகேடுகளை காரணம் காட்டி, மத்திய அரசு, 15 அமைச்சர்களை கைது செய்வதுடன், தமிழக ஆட்சியை கலைக்கப்போவதாகவும் தகவல் பரவியுள்ளது.

மேலும், ஆட்சி கலைப்புக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து விட்டதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இதையடுத்து, சென்னை உள்பட தமிழகத்தின் பல இடங்களிலும், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், பரபரப்பு நிலவுகிறது.

அதே சமயம், குடியரசு தலைவர் தேர்தல், வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளதால், அதுவரை, வெறும் கைது படலம் மட்டுமே அரங்கேறும், அதன் பின்னரே ஆட்சி கலைப்போ அல்லது தாமாக கலையும் சூழலோ உருவாகும் என்று முக்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.