கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை நெய்யாற்றங்கரை நெல்லிமூடு பகுதியில் குடிசை  வீட்டை ஜப்தி செய்ய வந்த போலீசார், மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு  மிரட்டல் விடுத்த நிலையில், கையில் வைத்திருந்த லைட்டரை போலீசார் தட்டி விட்டபோது  எதிர்பாராத வகையில் ஏற்பட்ட தீயில் கணவன் மனைவி பலியான பதற வைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

  

தமிழக கேரள எல்லை நெய்யாற்றங்கரை நெல்லிமூடு பகுதியை சேர்ந்தவர் ராஜன், இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது  இந்நிலையில் இது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு ராஜனுக்கு எதிராக வந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர் தங்கியிருந்த குடிசை வீட்டை ஜப்தி செய்ய இன்று காலை வீட்டுக்கு வந்து நடவடிக்கை மேற்கொள்ள முயன்றனர். அப்போது தனக்கு மேல் முறையீடு செய்யவும் தீர்ப்புக்கு ஸ்டே வாங்கவும், மாற்று வீடு தேடவும் அவகாசம் வேண்டும் என ராஜன் கேட்டுள்ளார். ஆனால் அதிகாரிகள் இதனை ஓத்துக்கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து தனது மனைவியுடன் சேர்த்து நிறுத்தி தலையில் பெட்ரோலை  ஊற்றிய அவர்  தீ வைத்துக் கொள்ளப் போவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தார். 

இதை பார்த்த போலீசார் ராஜனின் கையில் இருந்த லைட்டர் தட்டி பறிக்க முயன்றனர். அப்போது எதிர் பாராமல் தீ ராஜன் மற்றும் அவரது மனைவியின் உடலில் படர்ந்தது. குபீர் என பரவிய தீயில் எரிந்த அவர்கள் அங்கும் இங்குமாக அலறி ஓடினர். ஆனால் தீ மளமளவென பரவியதால் இருவரையும் அங்கிருந்தவர்கள் போராடியும் காப்பாற்ற முடியவில்லை.  இருவரும் தீக்காயங்கள் உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில். ராஜன் நேற்று உயிரிழந்து அவரின் உடல் அடக்கம் செய்து வரும் நிலையில் அவரது மனைவியும் நள்ளிரவில் உயிருழந்தார். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.