இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என திமுக பிரச்சார வியூகர் பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்திருக்கிறது. அதிமுக பிரசாந்த் கிஷோரை போல வடநாட்டில் ஒருவரை அழைத்து வர பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருகிறது. அவர்களுக்கு ஈடு கொடுக்க பாமகவும் தற்போது முப்படைகளை களத்தில் இறக்கத் தயாராகி வருகிறார் அன்புமணி.

 

2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலைச் சந்திக்க இந்த படைகள் அணி திரள்கின்றன. இந்த முப்படைகள் அமைப்பானது அணைக்கட்டு, பாப்பிரெட்டி பட்டி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சோழிங்கர், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, திருப்போரூர், காஞ்சிபுரம், வானூர், செஞ்சி, மைலம், விருதாச்சலம், விக்கிரவாண்டி, புவனகிரி ஆகிய 16 தொகுதிகளில் செயல்பட்டு வருகிறது.

 

இதுகுறித்து பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு, ’’கடந்த தேர்தலில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை சந்தித்ததில் 6 சதவீத வாக்குகளைப் பெற்றோம். தற்போது தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்குவதை தொடர்ந்து மற்ற கட்சிகள் கார்பரேட் நிறுவனங்களை நம்புவதைப் போல நாங்கள் பொதுமக்களை நம்பி இருக்கிறோம்.

 

அன்புமணியின் தம்பிகள், தங்கைகள் மற்றும் பொதுமக்கள்தான் இந்த முப்படையில் உள்ளனர். இந்தப் படையினருடன் அன்புமணி நேரடியாக கலந்துரையாடுவார்கள். வாக்காளர்களை கவருவது எப்படி என இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பா.ம.க இதுவரை செய்த சாதனைகள், மக்களுக்காக நடத்திய போராட்டங்களை இவர்கள் பொதுமக்களிடம் நேரடியாக எடுத்துச் செல்வார்கள்’’என அவர் தெரிவித்தார்.