திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஈழத்தை பற்றியோ ஈழத்தமிழர்கள் பற்றியோ எந்த வரலாறும் தெரியாது. அதைப் பற்றி அறிய வேண்டுமென்றால், அவருடைய கூட்டணியில் உள்ள வைகோவிடம் கேட்டு ஈழத்தமிழர்கள் வரலாறை ஸ்டாலின் அறிந்துக்கொள்ள வேண்டும் என்று பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக, பாமக ஆகிய கட்சிகளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துவருகிறார்கள். இரு கட்சிகளும் ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மு.க.ஸ்டாலினின் இந்தக் குற்றச்சாட்டுக்கு எதிராகவும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு, ஈழத் தமிழர்களுக்கு யார் துரோகம் இழைத்தது என்று அதில் பட்டியலிட்டிருந்தார். ஈழத் தமிழர் நலன் பற்றி திமுக பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமம் என்றும் டாக்டர் ராமதாஸ் விமர்சனம் செய்திருந்தார்.


இந்நிலையில் டாக்டர் ராமதாஸை தொடர்ந்து பாமக இளைஞரணி தலைவரும் எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு, தமிழின துரோகிகள் யார்? அதைப் பற்றி தன்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். “திமுக ஆட்சியில் இருந்தபோது ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைத்த கட்சி திமுக. கடந்த 2009-ம் ஆண்டில் ஈழத்தில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது 3 மணி நேரம் நாடக உண்ணாவிரதம் நடத்திய கட்சிதான் திமுக. இப்போது ஈழத்தமிழர்கள் மீது அக்கறை உள்ளது போல் ஸ்டாலின் நடித்துக்கொண்டிருக்கிறார். 


திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஈழத்தை பற்றியோ ஈழத்தமிழர்கள் பற்றியோ எந்த வரலாறும் தெரியாது. அதைப் பற்றி அறிய வேண்டுமென்றால், அவருடைய கூட்டணியில் உள்ள வைகோவிடம் கேட்டு ஈழத்தமிழர்கள் வரலாறை ஸ்டாலின் அறிந்துக்கொள்ள வேண்டும். இலங்கையிலிருந்து கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் பலர், அங்கு குடியுரிமை பெறாமல் இருக்கிறார்கள். அதற்குக் காரணம்  என்றாவது ஒரு நாள் சொந்தமண்ணுக்கு திரும்பி பழைய நிலபுலன்களுடன் வாழ வேண்டும் என அவர்கள் நினைப்பதுதான். இப்படி எதைப்பற்றியும் தெரியாத ஸ்டாலின் பாமகவை பற்றி குறைகூறுகிறார்.
ஈழத்தமிழர்கள் பற்றி திமுக பேசக்கூடாது. அவர்களுக்காக ஒரு துளி நன்மைகூட செய்யாத கட்சி திமுக. இதைப் பற்றி விவாதிக்க  நான் தயாராக இருக்கிறேன். என்னுடன் விவாதிக்க மு.க. ஸ்டாலின் தயாரா?” என 10 நிமிட வீடியோவில் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.