Asianet News TamilAsianet News Tamil

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்... நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.. அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்... நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்று கூறியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

Pmk president anbumani Ramadoss latest statement
Author
First Published Dec 14, 2022, 3:02 PM IST

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பொது இடங்களில் புகைப்பிடிக்க விதிக்கப்பட்ட தடை தமிழ்நாட்டில் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் பேரதிர்ச்சி அளிக்கின்றன.

பொது இடங்களில் பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்படக்கூடாது என்ற உன்னத நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட புகைத்தடை சட்டம் முறையாக செயல்படுத்தப்படாதது கண்டிக்கத்தக்கது. பொது இடங்களில் புகைப்பிடிக்க விதிக்கப்பட்ட தடையின்படி, இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில்  தண்டிக்கப்பட்டவர்களின் விவரங்களை மாநில வாரியாக வழங்கும்படி நாடாளுமன்ற மாநிலங்களவையில்  வினா எழுப்பியிருந்தேன். அதற்கு விடையளித்த மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவின் பவார், தமிழகத்தில் 2021-22 ஆம் ஆண்டில் பொது இடங்களில் புகைப்பிடித்ததாக 15,697 பேரிடம் மட்டுமே தண்டம் வசூலிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

Pmk president anbumani Ramadoss latest statement

2020-21 ஆம் ஆண்டில் இது 2432 ஆகவும்,  2019-20 ஆம் ஆண்டில் 20,001 ஆகவும் இருந்ததாக தமிழக அரசிடமிருந்து கிடைத்த தகவல்களை மேற்கோள்காட்டி மத்திய அமைச்சர் பாரதி தெரிவித்தார். தமிழ்நாட்டில் புகைத்தடை சட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படவில்லை என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது போதுமானதல்ல. 2021-22 ஆம் ஆண்டை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால், அண்டை மாநிலமான கர்நாடகத்தில் பொது இடங்களில் புகைப்பிடித்ததாக ஒரு லட்சத்து 47,319 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தமிழகத்தை விட 10 மடங்கு ஆகும். அதேபோல், கேரளத்தில் 73,464, இமாலயப் பிரதேசத்தில் 72,572, மராட்டியத்தில் 28,293, தெலுங்கானாவில் 28,035 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இம்மாநிலங்களை விட குறைந்த அளவிலேயே தமிழகத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத் தலைநகர் சென்னையின் ஏதேனும் ஒரு பகுதியில் 10 நிமிடங்கள் நடந்து சென்றாலே 50-க்கும் மேற்பட்டோர் பொது இடங்களில் புகைத்துக் கொண்டிருப்பதை காண முடியும். ஆனால், 2021-22 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த தமிழகத்திலும் ஒரு நாள் முழுவதும் புகைப்பிடித்தவர்களின் சராசரி எண்ணிக்கை 43 மட்டும் தான் என்று தமிழக அரசு கூறுகிறது.

இதையும் படிங்க..ஜனவரி 4ம் தேதி பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு !

2020-21 ஆம் ஆண்டில் இரு மாதங்கள் மட்டுமே முழுமையான ஊரடங்கு நடைமுறையில் இருந்த நிலையில்,  தமிழ்நாடு முழுவதும் சராசரியாக தினமும் 7 பேர் மட்டும் தான் பொது இடங்களில் புகைப்பிடித்ததாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2019-20 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 55 ஆக உள்ளதாக தமிழக அரசின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. பொது இடங்களில் புகை பிடிப்பதற்கான தடை 2008-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அன்று தொடங்கி 2022 மார்ச் 31 வரையிலான 13 ஆண்டுகள் 6 மாதங்களில் தமிழ்நாட்டில் பொது இடங்களில் புகைபிடித்ததாக தண்டிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,56,223 மட்டும் தான்.

அதாவது ஒரு நாளைக்கு 52 பேர் மட்டுமே. இந்த புள்ளிவிவரங்கள் திரிக்கப்பட்டவை அல்லது குறைக்கப்பட்டவை என்பது முதல் பார்வையிலேயே தெளிவாகி விடும். பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் விடும் புகையை சுவாசிப்பதால் (றிணீssவீஸ்மீ ஷினீஷீளீவீஸீரீ) பெண்களுக்கும், குழந்தைகளும் ஏற்படும் பாதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. பொது இடங்களில் பிறர் உள்ளிழுத்து விடும் புகையிலையின் புகையை சுவாசிப்பவர்களுக்கு  இதய நோய் ஏற்படும் வாய்ப்புகள் 40% அதிகமாக உள்ளன.

Pmk president anbumani Ramadoss latest statement

பொதுவெளியில் விடப்படும் புகையில் 7000 வேதிப்பொருட்கள் உள்ளன. இவற்றில் 69 வேதிப் பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை. பொது இடங்களில் விடப்படும் புகையை சுவாசித்தால் நுரையீரல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், கணையப் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், சிறுநீர்ப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல வகையான புற்றுநோய்களும், ஆஸ்துமா, நீரிழிவு நோய் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகின்றன. உலகம் முழுவதும் புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 80 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். இவர்களில் 70 லட்சம் பேர் நேரடியாக புகைப்பிடிப்பதால் உயிரிழக்கின்றனர். 

பிறர் புகைத்து விடும் புகையை சுவாசிப்பதால் உயிரிழப்போர் எண்ணிக்கை ஆண்டுக்கு 12 லட்சம் ஆகும். யாரோ புகைப்பதை சுவாசிப்பதால் எந்தத் தவறும் இழைக்காத பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப் படுவதை அனுமதிக்க முடியாது. இதைத் தடுக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தான் மத்திய சுகாதார அமைச்சராக பதவி வகித்த போது பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை நான் கொண்டு வந்தேன். ஆனால், அந்த நோக்கத்தை புரிந்து கொள்ளாத மாநில அரசுகள் இத்திட்டத்தை முறையாக செயல்படுத்தாததால் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான அப்பாவி உயிர்களை பலி கொடுக்கின்றன.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்... நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற அடிப்படையில், பொது இடங்களில் புகைத்தடை சட்டத்தை தமிழக அரசு இனி தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.  பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க பறக்கும் படைகள் அமைக்கப் பட வேண்டும். பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களை பொதுமக்களே படம் எடுத்து வாட்ஸ்-ஆப் மூலம் அனுப்பினால், அதனடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முறையையும் காவல்துறையும், சுகாதாரத்துறையும் இணைந்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க..2023ம் ஆண்டு திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு நடக்கும்.. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ் !

Follow Us:
Download App:
  • android
  • ios