PMK Founder Ramdoss Statement

தமிழை அழிப்பதற்கான நடவடிக்கைகளில் தான் ஜெயலலிதா வழியில் நடப்பதாகக் கூறப்படும் பினாமி அரசு ஆர்வம் செலுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்பிறம் சாட்டியுள்ளார். பி.எட். படிப்பில் தமிழ் விருப்பப்பாடத்தை தமிழக அரசு நீக்கியிருக்கும் நிலையில் ராமதாஸ் இவ்வாறு கூறியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இது தொடர்பாக ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்: 

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது. உலக அளவில் தமிழை வளர்ப்பதற்காக இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் தமிழக அரசு, அதேநேரத்தில் தமிழ்நாட்டில் கல்வி சார்ந்த விஷயங்களில் தமிழை புறக்கணிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் பி.எட். எனப்படும் இளநிலை கல்வியியல் படிப்பு 2015-16 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ஓராண்டுப் படிப்பாக இருந்து வந்தது. இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழு அறிவுரைப்படி 2015-16 ஆம் ஆண்டு முதல் பி.எட். படிப்பு இரு ஆண்டு கால அளவு கொண்டதாக மாற்றப்பட்டது. பி.எட். படிப்பு ஓராண்டு படிப்பாக இருந்தவரை அதில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிப்பாடங்களும் விருப்பப் பாடங்களாக இருந்தன. ஆனால், பி.எட்.
படிப்பு ஈராண்டு கால அளவு கொண்டதாக மாற்றப்பட்ட பின்னர் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிப்பாடங்களும் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டன. 

தமிழகத்தில் தமிழாசிரியர் பணியிடங்கள் ஏராளமாக காலியாக உள்ளன. இதனால் அறிவியல், கணிதம் படித்த ஆசிரியர்களும் பல நேரங்களில் தமிழ்ப் பாடம் நடத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தமிழ் மொழிப் பாடத்தை நடத்துவதாக இருந்தாலும், பிற பாடங்களை தமிழ் வழியில் நடத்துவதாக இருந்தாலும் பி.எட். படிப்பில் தமிழ் மொழியை விருப்பப்பாடமாக படித்தால் மட்டுமே சாத்தியமாகும்.

ஏனெனில், பொதுத் தமிழ் எனப்படும் அப்பாடத்தில் தான் தமிழையும், தமிழ் மொழிவழியில் பிறப்பாடங்களையும் எவ்வாறு கற்பிப்பது என்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டிருக்கும். அந்தப் பாடம் நீக்கப்பட்டிருப்பதன் மூலம் தமிழையும், தமிழ் மொழிப் பாடங்களையும் கற்பிக்கும் திறன் ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது.

தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழறிஞர்களின் நலனுக்காகவும் அம்மாவின் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து கூறி வருகிறார். உண்மையில் ஜெயலலிதாவின் அரசும், ஜெயலலிதா வழியில் நடப்பதாகக் கூறப்படும் பினாமி அரசும் தமிழை அழிப்பதற்கான நடவடிக்கைகளில் தான் ஆர்வம் செலுத்துகின்றனர்.

தமிழுக்கு எதிரான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டு வரும் அதிமுக அரசு, பி.எட். படிப்பில் தமிழ் விருப்பப்பாடத்தை நீக்கியிருப்பதன் மூலம் தமிழுக்கு எதிராக மீண்டும் ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. தமிழுக்கு எதிரான இந்த நடவடிக்கையை கைவிட்டு, பி.எட். படிப்பில் தமிழ் விருப்பப்பாடத்தை மீண்டும் சேர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழாசிரியர்கள் வேலையின்றி இருப்பதால் அவர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.