Asianet News TamilAsianet News Tamil

நீட் விவகாரத்தில் முழு கிணறு தாண்டவில்லை...! 3 மாதத்தில் அனுமதி பெற்றாக வேண்டும்... அலர்ட் செய்யும் ராமதாஸ்...

செப்டம்பர் மாத இறுதியில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெறவுள்ள நிலையில், நீட் விலக்கு சட்ட மசோதா மீது   குடியரசுத் தலைவரின்  ஒப்புதலை 3 மாதங்களில் பெற்றாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

pmk founder Ramdas has urged the government to take immediate action on the NEET exemption bill
Author
Tamil Nadu, First Published May 5, 2022, 11:54 AM IST

234 நாட்கள் காத்திருந்த நீட் மசோதா

சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகள்  மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவோடு நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதலை பெற தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுனவர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டு மாணவர்களுக்கு விலக்கு அளித்து  தமிழக சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவை 86 நாட்கள் ஆய்வுக்குப் பின் மத்திய அரசுக்கு ஆளுனர் அனுப்பி வைத்துள்ளார். இதை எண்ணி ஆறுதல் பட முடிகிறதே தவிர, மகிழ்ச்சியடைய முடியவில்லை. அதற்கு காரணம் நாம் இன்னும் முழு கிணற்றை தாண்டவில்லை. தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்; 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் சட்ட முன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதை 142 நாட்கள் ஆய்வுக்குப் பிறகு பிப்ரவரி ஒன்றாம் தேதி அரசுக்கு ஆளுனர் திருப்பி அனுப்பினார். தொடர்ந்து மார்ச் 8-ஆம் தேதி சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட சட்ட முன்வரைவைத் தான் குடியரசுத் தலைவருக்கு ஆளுனர் அனுப்பி வைத்துள்ளார். அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு முடிவு கட்டப்பட்டுவிடும். ஆனால், நீட் விலக்கு சட்டமுன்வரைவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அது அவ்வளவு எளிதானது அல்ல. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவு அதிகபட்சமாக ஒரு வாரத்தில் ஆளுனர் மாளிகை வழியாக குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், முதல் முறை நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவு 142 நாட்கள் கழித்து திருப்பி அனுப்பப்பட்டது, அதன்பின் மீண்டும் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவு 86 நாட்கள் கழித்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கான மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என மொத்தம் 234 நாட்களை இதற்காக செலவழிக்க வேண்டியிருந்தது. 

pmk founder Ramdas has urged the government to take immediate action on the NEET exemption bill

குடியரசு தலைவர் ஒப்புதலை பெற எவ்வளவு காலம் ஆகும் ?

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை தொடர்பான மாநில அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் தமிழக ஆளுனர் மாளிகை நடந்து கொண்ட முறையை உச்சநீதிமன்றம்  கடந்த வாரம் கடுமையாக விமர்சித்திருந்தது. நீட் விலக்கு சட்டத்திலும் கூட அதே போன்ற விமர்சனத்தை  எதிர்கொள்ளக் கூடாது என்ற எண்ணம் காரணமாகக் கூட நீட் விலக்கு சட்ட முன்வரைவை குடியரசுத் தலைவருக்கு ஆளுனர் அனுப்பி வைத்திருக்கலாம். எப்படியாக இருந்தாலும் இது தகுதிச் சுற்றில் பெற்ற வெற்றியைப் போன்றது தான். 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்டம் இதே போன்ற கட்டத்தை மிக எளிதாக கடந்து விட்டிருந்தது. நீட் விலக்கு சட்டம் ஆளுனர் மாளிகையை கடப்பதற்கே 234 நாட்கள் என்றால், குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற எவ்வளவு காலம் ஆகும்? அதை விரைவுபடுத்துவதற்கு எவ்வளவு வேகமாக செயல்பட வேண்டும்? என்பதையெல்லாம் கருத்தில் கொண்டு அதற்கான உத்திகளை அரசு வகுக்க வேண்டும். அப்போது தான் நீட் விலக்கு சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கான நோக்கத்தை நம்மால் அடைய முடியும். 

pmk founder Ramdas has urged the government to take immediate action on the NEET exemption bill
3 மாதத்திற்குள் அனுமதி பெற வேண்டும்

2022-ஆம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் படிப்புக்கான நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தேர்வின் முடிவுகள் ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியாகி, அதனடிப்படையில் செப்டம்பர் மாத இறுதியில் தான் நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்கும். மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு முன்பாக நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று விட்டால் கூட, நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மேற்கொள்ள முடியும். 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு நுழைவுத் தேர்வு ரத்து சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட போது, அதற்கு 83 நாட்களில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டது. இப்போது 3 மாதங்களுக்குள் ஒப்புதல் பெற வேண்டியது கட்டாயமாகும். 2017-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று கூறி மத்திய அரசு திருப்பி அனுப்பி விட்டது. அதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு  இந்த முறை குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கான அனைத்து நியாயங்களையும் மத்திய அரசிடம் முன்வைக்க வேண்டும். சட்ட வல்லுனர்களின் ஆலோசனைகள், அரசியல் கட்சிகளின் ஆதரவு உள்ளிட்ட அனைத்தையும் பெற்று நீட் விலக்கு சட்ட முன்வரைவுக்கு விரைவாக குடியரசுத் தலைவரின்  ஒப்புதலைப் பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துவதாக பாமக நிறவனர் ராமதாஸ் அந்த அறிக்கையில்லகூறியுள்ளார்.


 

Follow Us:
Download App:
  • android
  • ios