தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது வீட்டிற்கு சென்று ராமதாஸ் சந்தித்ததில் அதிமுக அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.  

2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக - பாமக மற்றும் பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ள நிலையில் விஜயகாந்தை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு தேமுதிக உடன் கூட்டணி அமைப்பதில் அதிருப்தி இருந்து வந்தது. 

2014 மக்களவைத் தேர்தலில் தேமுதிக - பாமக கூட்டணியில் இடம்பெற்ற நேரத்தில் கூட இரண்டு கட்சிகளும் பெரிய அளவில் நட்பாக இல்லை. இந்நிலையில் தற்போது அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறும் கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. தேமுதிக இழுபறிக்கு காரணம் பாமகவுக்கு அதிக தொகுதிகள் கொடுத்ததாகவும், பாமக கூட்டணியால் அதிமுக கூட்டணியில் இணைய தயங்குவதாகவும் வெளிப்படையாகவே கூறினார் தேமுதிக துணைப்பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ்.

அதிமுக கூட்டணியில் இணைந்தால் பாமக உள்ளடி வேலைகளை பார்க்கும் என தேமுதிக உள்ளூர சந்தேகப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின. தொகுதிகளை ஒதுக்குவதிலும் இரு கட்சிகளுக்கும் போட்டி மனப்பான்மை இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில்  இந்நிலையில் முதல்முறையாக விஜயகாந்தை, ராமதாஸ் தற்போது சந்தித்துப் பேசியுள்ளார். இருகட்சிகளுக்கும் நல்ல உறவு இருக்க வேண்டும் என்பதற்காக விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரிக்குமாறு அதிமுக தலைமை அழுத்தம் கொடுத்ததால் ராமதாஸ் விஜயகாந்தை வீட்டிற்கே சென்று சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது அதிமுகவை சேர்ந்த கோகுல இந்திரா உடனிருந்ததையும் கவனிக்க வேண்டும். 

விஜயகாந்த்- ராமதாஸ் மோதல் இன்று நேற்று நடந்ததல்ல கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது கூட, ‘’பாமக ராமதாஸுக்கு ரனிஜிதான் பயப்படுவார். நான் பயப்பட மாட்டேன். நான் நடித்த கஜேந்திரா படத்தில் ஒரு பாட்டை நீக்கச்சொல்லி ராமதாஸ் மிரட்டினார் ஆனால் நான் ஒப்புக்கொள்ளவில்லை’’ என பேசினார் விஜயகாந்த். ராமதாஸுக்கும் ராமதாஸுக்கும் 2004 முதல் கஜேந்திரா படத்தில் ஆரம்பித்தது முட்டல் மோதல்கள் இருந்து வருகிறது. 

அடுத்து சாதியை அடிப்படையாக வைத்து ராமதாஸ் சுயநல அரசியல் நடத்துகிறார். அவரை அரசியலை விட்டே அகற்ற வேண்டும்’ என்றெல்லாம் சீண்டினார் விஜயகாந்த். விஜயகாந்த் முதல் தேர்தலை சந்திக்கும்போது வடமாவட்டங்களில் பிரச்சாரத்தில் விஜயகாந்தை முற்றுகையிட்டனர் பாமக தொண்டர்கள். இந்த மோதலை இப்போது கூட்டணி அமைத்து எடப்பாடி முடித்து வைத்து இருக்கிறார்.