வேலூர் பாமக வேட்பாளர் கடத்தல்.. எங்களுக்கே பயம் காட்டுறீங்களா..? திமுகவை பொளக்கும் ராமதாஸ் !!
பாமக வேட்பாளரை திமுக வேட்பாளர் கடத்தி மிரட்டியுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. 1,374 மாநகராட்சி கவுன்சிலர், 3,843 நகராட்சி கவுன்சிலர், 7,621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு வருகிற 19-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கும், அதிமுக கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.
மேலும் பாமக, பாஜக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, விஜய் மக்கள் இயக்கம் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. வேலூர் மாநகராட்சி 8-வது வாரடில் திமுக சார்பில் சுனில் குமார், அதிமுக சார்பில் சுரேஷ்குமார், பா.ம.க சார்பில் நாயுடு பாபு (எ) ராமச்சந்திரன், பா.ஜ.க சார்பில் ராஜா தியாகராஜன், உட்பட்ட 6 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 5 பேரின் மனுக்களும் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டு சுனில்குமாரின் மனு மட்டும் ஏற்கப்பட்டது.
இதனால் திமுக வேட்பாளர் சுனில் குமார் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். வேலூர் மாநகராட்சியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் முதல் முறையாக திமுகவை சேர்ந்த சுனில்குமார் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். இதனை அடுத்து, திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் வேலூர் மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி நந்தகுமார் ஆகியோரை சுனில் குமார் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ‘வேலூர் மாநகராட்சி 24 வட்டத்தில், தோல்வி பயம் காரணமாக, பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஆர்.டி. பரசுராமனை திமுக மாவட்ட செயலாளர்கள் கடத்திச் சென்று போட்டியிலிருந்து விலக வேண்டும்; இல்லையேல் தொழில் செய்ய முடியாது என்று மிரட்டுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.
மக்கள் செல்வாக்குள்ளவர்கள் வெற்றி பெறுவது தான் ஜனநாயகம். செல்வாக்கு இல்லாதவர்கள் அதை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாறாக மிரட்டக் கூடாது. பாமக வேட்பாளரை மிரட்டிய திமுகவினர் மீது மாநில தேர்தல் ஆணையம், காவல்துறை, திமுக தலைமை ஆகியவை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை டேக் செய்தி பதிவிட்டு இருக்கிறார்.