பேரறிவாளனின் தாயாரிடம் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டிய கடமை எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு உள்ளது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஜிவ் கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்டு தற்போது சிறை விடுப்பில் வந்திருக்கும் பேரறிவாளன் கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கும் ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள அவரது தந்தைக்கும் தொடர் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும் அறிந்து கவலையடைந்தேன். இத்தகைய சூழலில் அவரது விடுதலை தாமதமாவது வேதனையளிக்கிறது.
சிறை விடுப்பில் வந்துள்ள பேரறிவாளனுக்கு விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதற்காக இம்மாதத்தின் பிற்பகுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. மற்றொரு புறம் அவரது தந்தை குயில்தாசன் முதுகெலும்பு சார்ந்த குறைபாடுகளால் தொடர்ந்து மருத்துவம் பெற்று வருகிறார். மற்றவர்களின் துணை இல்லாமல் அவரால் நிற்கவோ, அமரவோ முடியாத நிலை நிலவுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தமது வாழ்க்கையின் பெரும்பகுதியை மகனை மீட்பதற்கான போராட்டத்திலேயே கழித்து விட்டார். முதுமையால் சோர்ந்து விட்ட அவருக்கும் இயல்பான பணிகளை செய்ய மற்றவர்களின் உதவியும், மன அமைதிக்கு உறவுகளின் அரவணைப்பும் தேவைப்படுகிறது. இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அருமருந்து பேரறிவாளன் அவரது தாய், தந்தையருடன் இருப்பதுதான். ஆனால், அவரது விடுதலை ஆறரை ஆண்டுகளாக தொடுவானம் போன்று விலகிக் கொண்டே செல்கிறது. இன்னும் சில நாட்களில் விடுதலை என்பது போல தோன்றினாலும், ஆண்டுகள் கடந்தும் அது சாத்தியமாகாதது அக்குடும்பத்தின் வேதனையையும், மன உளைச்சலையும் அதிகமாக்கியுள்ளது.
பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 தமிழர்களின் விடுதலைக்காக பாமக தொடர்ந்து போராடி வருகிறது. இன உணர்வு கொண்ட பல்வேறு அமைப்புகளும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளன. 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான அறிவிப்பை 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். ஆனால், அப்போதைய மத்திய அரசு போட்ட முட்டுக்கட்டையால் அது தடுக்கப்பட்டது. அதை எதிர்த்து பேரறிவாளன் தனிப்பட்ட முறையில் நடத்திய சட்டப்போராட்டத்தின் பயனாகத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161வது பிரிவின்படி பேரறிவாளனை விடுதலை செய்யத் தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.


பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், இதுகுறித்து சோனியா காந்திக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி இவ்வழக்கின் எதிரிகள் பட்டியலில் 18ஆவதாக பேரறிவாளனின் பெயர் உள்ளது. பேரறிவாளன் விடுதலை குறித்த முடிவுக்காக, வேறு எந்த காரணிகளுக்காகவும் காத்திருக்கத் தேவையில்லை என்பதற்கு இவையே போதுமானவையாகும். மேலும், ‘உங்கள் மகனை விடுதலை செய்து உங்களிடம் ஒப்படைப்பேன். கலங்காதீர்கள்’ என்று பேரறிவாளனின் தாயாரிடம் ஜெயலலிதா உறுதியளித்திருந்தார். அந்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டிய கடமையும் அரசுக்கு உள்ளது.
எனவே, பேரறிவாளன் ஏற்கனவே 30 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்ட நிலையில், அவரின் உடல்நிலை மற்றும் குடும்பச் சூழல் கருதி ஆளுனரின் ஒப்புதல் பெற்று விடுதலை செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், மற்ற 6 தமிழர்களின் விடுதலைக்கான நடவடிக்கைகளையும் தமிழக முதல்வர் விரைவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.