அதிமுக கூட்டணியில்  பாமக சேர்ந்ததையடுத்து , ராமதாஸ் ஒரு முக்கிய தலைவராக மாறிவிட்டார். தைலாபுரம் தோட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம்  உள்ளிட்ட அதிமுகவினருக்கு  விருந்து வைத்தார் ராமதாஸ். 

இந்நிலையில் கட்சித் தொண்டர்களிடம் பேசிய அன்புமணி, வரும்  ஜூலை மாசம் உள்ளாட்சித் தேர்தல் வருது. அதை மனசுல வச்சிக்கங்க. நாடாளுமன்றத் தேர்தல்ல நாம ஒழுங்கா வேலை செஞ்சு, வெற்றி அடையணும். அதுக்குப் பின் உள்ளாட்சித் தேர்தல்லையும் நம்ம வெற்றி தொடரணும் என  மகிழ்ச்சியாக பேசினார்.

இதையடுத்து நிர்வாகிகளும், வேட்பாளர்களும் தேர்தல் பணிகளில் முழு மூச்சாக இறங்கினர். ஆனால் 7 தொகுதிகளுக்கும் வர வேண்டிய தேர்தல் செலவுக்கான முழு தொகை சில தொகுதிகளுக்கு மட்டுமே சென்றதால் மற்ற தொகுதிகளில் பாமக வேட்பாளர்கள் கையைப் பிசைர்நது கொண்டிருக்கிறார்கள்.

அதே நேரத்தில்  அன்புமணி நிற்கும் தர்மபுரியும், வடிவேல் ராவணன் நிற்கும் விழுப்புரம் தொகுதியும்தான் செமையாக கவனிக்கப்படுவதாகவும், . இந்த இரண்டு தொகுதியைத் தவிர மற்ற ஐந்து தொகுதிகளுக்கும் ஆரம்பத்தில் கொடுத்த குறைந்தபட்ச தொகையைத் தவிர பிறகு எதுவும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

.

திண்டுக்கல் பாமக வேட்பாளர் ஜோதிமுத்து கடந்த ஒருவாரமாகவே திணறி வருகிறார். ஆரம்பத்தில் இருந்த சில கோடிகளை செலவிட்ட அவர், இடைப்பட்ட காலத்தில் பணமே இல்லாமல் கஷ்டப்பட்டார். அப்போது மாவட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வேட்பாளரிடம், ‘நான் உங்க கூட வர்றேன். எல்லா இடத்துக்கும் வர்றேன். ஆனால் இதுக்கு மேல என்னால செலவு பண்ண முடியாது. பணத்தை ரெடிபண்ணுங்க’ என்று கூறியுள்ளார்.

அதற்கு வேட்பாளர், ‘நீங்களே எங்க தலைமைக்கிட்ட பேசிப் பாருங்க. நான் தலைவர் ஜி.கே.மணி கவனத்துக்குக் கொண்டு போயிட்டேன்’ என்று சொல்லியிருக்கிறார். அப்போது அமைச்சர் சொன்ன தகவல் பாமக வேட்பாளரை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.

என்னப்பா… உங்க கட்சியோட கூட்டணி போடும்போதே எல்லா தொகுதி செலவுக்கும் கொடுத்தாச்சு. அதை வாங்குறது உங்க பாடு’ என்றபடியே தன் செலவைக் குறைத்துவிட்டார் அமைச்சர். இதுபற்றி எடப்பாடியிடமும் சொல்லிவிட்டாராம்.

அரக்கோணம் ஏ.கே.மூர்த்திக்கே இதுதான் நிலைமை. கடந்த வாரம் அரக்கோணத்துக்கு எடப்பாடி பிரச்சாரத்துக்குச் சென்றபோது, ‘பாமக தரப்பில் இருந்து ஒழுங்கா பணம் செலவு பண்ண மாட்டேங்குறாங்க. இதனால விளைவு நமக்குதான் வந்து சேரும்’ என்று அதிமுக நிர்வாகிகளே புகார் வாசித்துள்ளார்கள். இப்படி பணம் தராமல் பாமக தலைமை இழுத்தடிப்பதால் அதிமுக மற்றும் பாமக தொண்டர்கள் தேர்தல் வேலைகளில் சுணக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது