* பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணி என்பது மக்கள் நலனுக்கான கூட்டணி அல்ல. முழுக்க முழுக்க சுயநலனுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி. தமிழர்களுக்கு விரோதமான கூட்டணி: கருணாஸ். (சரிங்க புலி, எக்கச்சக்க வீராவேசமா பேசிப்புட்டு, கொஞ்ச நாளைக்கு முன்னாடி முதல்வரை  கை நிறைய பூவோடு சந்திச்சு பதுங்குனீகளே அதுக்கு பேரு சுயநலனில்லாம, சுண்ணாம்பா?)

* ஜெயலலிதாவுக்கு பிடிக்காத பா.ம.க.வுடன் கூட்டணியை வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இவர்களை அம்மாவின் ஆன்மா கூட மன்னிக்காது. இது மிகப்பெரிய தோல்வி கூட்டணி: டி.டி.வி.தினகரன். (அம்மாவுக்கு உங்க டீமையும் கூடத்தான் ஆகாது. தூக்கி வெளியில எறிஞ்சுட்டு அப்புறம் சசியை மட்டும்தான் சேர்த்தாங்க. ஆனா நீங்க இன்னைக்கு அவங்க பெயர்லேயே கட்சி நடத்துறீங்களே...இத மட்டும் அந்த ஆன்மா மன்னிக்குமா?)

* முதலமைச்சர் முன்னிலையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மயக்கம். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பி.பி. அதிகமானதால் மயக்கமாம்.: செய்தி (பி.பி. அதிகமாகுற அளவுக்கு அப்படி என்ன நடந்திருக்கும்?...கூட்டணி வெச்சுக்கிறதுக்கு அந்த கட்சிகள் கேட்ட தொகை எதுனாச்சும் அமைச்சர் காதுல விழுந்திருக்குமோ?)

* பா.ஜ.க.வுன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்ததாக இதுவரை தெரியவில்லை. அந்தக் குழுவில் நான் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்: தம்பிதுரை. (தல, அப்ப....’அடுத்து அமையும் மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க.வும் இடம்பெறும்.’ அப்படின்னு நீங்க யாரை பார்த்து சொன்னீங்க! ஒருவேளை உங்க கூட்டணி ஹீரோ பா.ம.க. தலைமையில் மத்தியரசு அமையுமோ? # டவுட்டு)

* அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என்பது மெகா கூட்டணி, மக்கள் நல கூட்டணி, வெற்றிக் கூட்டணி. நாற்பது தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெற்றே தீரும்: ராமதாஸ். (நல்லா டைமிங்கா, ரைமிங்கா சொல்றீங்க ஓ.கே. எலெக்‌ஷன் முடிஞ்ச பிறகு என்ன மாதிரி பேசப்போறீங்க அப்படிங்கிறதை நினைச்ச இப்பவே வயிறு கலங்குது மருத்துவரே)