சினிமாவில் புகைபிடிக்கும் காட்சி தொடர்பான விவகாரத்தில் விஜய் சேதுபதியின் கேள்விக்கு , பாமகவின் ’பசுமைத் தாயகம்’  பதிலளித்துள்ளது .

சமீபத்தில் “புகை பிடிக்கும் காட்சியில் நடிப்பது தொடர்பாக நடிகர்களை எதற்காக வம்புக்கு இழுக்கிறீர்கள்? என்றும் அதற்குப் பதிலாக சிகரெட் தயாரிக்கும் நிறுவனத்துக்கு எதிராகக் குரல் கொடுங்கள் என்றும்  விஜய் சேதுபதி கூறியிருந்தார்.

விஜய் சேதுபதிக்கு பதிலளிக்கும் விதமாக பசுமைத் தாயகம் அமைப்பு நேற்று  அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், "நடிகர் விஜய் சேதுபதிக்கு பொது அறிவு இல்லையா? புகையிலை கம்பெனிகளையும் மருத்துவர் அன்புமணி எதிர்க்கிறார்!"

“புகைப் பிடிக்கும் காட்சியில் நடிப்பது தொடர்பாக நடிகர்களை எதற்காக வம்புக்கு இழுக்கிறீர்கள்? அதற்குப் பதிலாக சிகரெட் தயாரிக்கும் கம்பெனிக்கு எதிராக குரல் கொடுங்கள்” என்று கூறியிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி!

நடிகர்கள் புகைபிடிப்பதை எதிர்ப்போர், புகையிலை கம்பெனிக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என்று நடிகர் விஜய் சேதுபதிக்கு யார் சொன்னது?

மருத்துவர் அய்யா அவர்களால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பு புகையிலைப் பொருட்களை எல்லா வழிகளிலும் ஒழித்துக்கட்ட கடந்த இருபது ஆண்டுகளாக போராடி வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) முன்வைக்கப்பட்ட MPOWER எனும் புகையிலை ஒழிப்பு திட்டங்களை முழுமையாக செயல்படுத்தியவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தான். இந்த உண்மைகளை நடிகர்களுக்கு யாராவது எடுத்துச்சொல்ல வேண்டும்!

"புகையிலை நிறுவனங்களுக்கு பசுமைத் தாயகம் எதிர்ப்பு"

"சிகரெட் தயாரிக்கும் கம்பெனிக்கு எதிராக குரல் கொடுங்கள்" - என்கிறார் விஜய் சேதுபதி. அதையும் பசுமைத் தாயகம் அமைப்பு செய்துகொண்டுதான் இருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய சிகரெட் தயாரிப்பு நிறுவனமான ITC பள்ளிகளில் தூய்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 2012 ஆம் ஆண்டில் நடத்திய போது, அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். அப்போது அதனை எதிர்த்து போராட்டம் நடத்தியது பசுமைத் தாயகம். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.

இந்த போராட்டத்தை தொடர்ந்து, தமிழ்நாட்டில் புகையிலை நிறுவனங்கள் எதுவும் எந்தவொரு நிகழ்ச்சிக்காகவும் பள்ளிகளில் நுழையக்கூடாது. அந்த நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் பள்ளி குழந்தைகள் பங்கேற்க கூடாது என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

இந்தசெய்தி சர்வதேச ஆய்வு பத்திரிகையான BMJ Tobacco Control இதழில் வெளியானது (பின்னூட்டத்தில் காண்க).

"புகையிலையை ஒழித்த சாதனையாளர் அன்புமணி"

இந்தியாவில் ஆண்டுக்காண்டு புகையிலை பழக்கம் அதிகரிக்கும் என 2005 ஆம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம் கணித்தது. ஆனால், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால், இந்தியாவில் புகைபிடிப்போர் அளவு 9% குறைந்துள்ளது. இது மிகப்பெரிய சாதனை ஆகும்.

மருத்துவர் அன்புமணி அவர்கள் மேற்கொண்ட பலமுனை நடவடிக்கைகளில் ஒன்று சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகளை முறைப்படுத்தியதும் ஆகும்.

பொது இடங்களில் புகைக்க தடை, பள்ளிகளுக்கு அருகில் புகையிலை பொருட்கள் விற்க தடை, புகையிலை விளம்பரங்களுக்கு தடை, புகையிலை பொருள் விற்கும் கடைகளில் விளம்பரங்களுக்கு தடை, புகையிலை பொருட்கள் மீது எச்சரிக்கை படம், புகையிலைக்கு அதிக வரி, சிறுவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்க தடை, குட்கா-பான்மசாலாவுக்கு முழு தடை - உள்ளிட்ட நடவடிக்கைகள் அவரது முயற்சியால் விளைந்த நன்மைகள் ஆகும். அவற்றில் ஒரு பகுதியாக சினிமாவில் எச்சரிக்கை படம், எச்சரிக்கை விளம்பரம் உள்ளிட்டவற்றையும் அவர் சட்டபூர்வமாக செயல்படுத்தியுள்ளார்.

மாபெரும் சாதனைகளை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை; கொச்சைப் படுத்தாமல் இருக்க நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளது.