Asianet News TamilAsianet News Tamil

தரமற்ற மின்கம்பம்.. ஆபத்தில் மின்வாரிய ஊழியர்கள்.. தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்த அன்புமணி ராமதாஸ்

சிவகாசியில் உடைந்த மின்கம்பத்தை தயாரித்தவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட மின்கம்பங்களை தர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று  பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Pmk anbumani ramadoss letter to tamilnadu govt about tneb workers situation
Author
Tamilnadu, First Published Dec 6, 2021, 1:43 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் புதிதாக நடப்பட்ட மின்சாரக் கம்பம் உடைந்து விழுந்ததில், அதில் பணியாற்றிக் கொண்டிருந்த காளிராஜ் உயிரிழந்தது மிகவும் வேதனையளிக்கும் நிகழ்வாகும். இந்த விபத்தின் பின்னணி குறித்து விசாரித்ததில் கிடைத்துள்ள தகவல்கள், மின்சார வாரியத் தொழிலாளர்கள் எந்த அளவுக்கு உயிருக்கு ஆபத்தான சூழலில் பணியாற்றுகின்றனர் என்பதை அம்பலப்படுத்தியுள்ளன. சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் திருப்பதி நகரில் நேற்று முன்நாள் புதிய மின்சாரக் கம்பத்தை நட்டு, அதில் மின்சாரக் கம்பிகளை பொறுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த காளிராஜ் என்ற பணியாளர் மின்சாரக் கம்பம் உடைந்து விழுந்ததில் சாலையில் அடிபட்டு உயிரிழந்தார். 

Pmk anbumani ramadoss letter to tamilnadu govt about tneb workers situation

இந்த விபத்தில் காளிராஜுக்கு உதவியாக பணியாற்றிய முருகேசன் என்ற பணியாளர் கை முறிந்து சிவகாசி மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சனிக்கிழமை டுவிட்டரில் பதிவிட்டிருந்த நான், மின் கம்பங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அதுமட்டுமின்றி, இந்த நிகழ்வு குறித்து விசாரிப்பதற்காக பாமக பொருளாளர் திலகபாமா தலைமையில் குழு ஒன்றும் அனுப்பப்பட்டிருந்தது. 

சிவகாசி அருகே விபத்து நடந்த இடத்திலும், நமஸ்கரித்தான் பட்டியில் உள்ள காளிராஜின் வீட்டிலும் அக்குழுவினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியூட்டும் பல உண்மைகள் வெளியாகியுள்ளன. மின் கம்பம் உடைந்து விழுந்த விபத்தில் காளிராஜ் உயிரிழந்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தான் மின்துறை அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர். அதன்பின் அவரது உடல் ஆய்வுக்குப் பிறகு ஒப்படைக்கப் பின்னர் அவரது குடும்பத்திற்கு அரசுத் தரப்பில் எவரும் ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை. இறுதிச் சடங்குக்காக அரசு சார்பில் ரூ.25,000 வழங்கப்பட்டதைத் தவிர வேறு எந்த உதவியும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

Pmk anbumani ramadoss letter to tamilnadu govt about tneb workers situation

விபத்தில் உயிரிழந்த காளிராஜ் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தில் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். மின்சார வாரியத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றிய போதிலும், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தான் அவர் பணி நிலைப்பு செய்யப்பட்டார். இதன் பிறகு தான் அவரது குடும்பம் பொருளாதார ரீதியாக முன்னேற்றங்களைச் சந்திக்கக் காத்திருக்கிறது. ஆனால், காளிராஜின் மறைவு அனைத்து நம்பிக்கைகளையும் சிதைத்து விட்டது. காளிராஜின் மறைவுக்கு அவர் காரணமல்ல. எங்கோ நடந்த ஊழலும், மின்கம்பத்தை தயாரிப்பதற்கான தரத்தில் தெரிந்தே செய்யப்பட்ட சமரசமும் தான் காளிராஜின் இறப்புக்குக் காரணம் ஆகும். அதனால், அவரது உயிரிழப்பை வழக்கமானதாகக் கருதி ஓரிரு லட்சம் வழங்குவதுடன் அரசு ஒதுங்கிவிடக் கூடாது. காளிராஜ் இறந்திருக்காவிட்டால் இன்னும் 33 ஆண்டுகள் பணியாற்றியிருப்பார். 

அதைக் கருத்தில் கொண்டு அவரது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். காளிராஜுக்கு இப்போது ஏற்பட்ட விபத்து எப்போது வேண்டுமானாலும் மற்ற பணியாளர்களுக்கு ஏற்படலாம் என்ற நிலை தான் நிலவுகிறது. மின்சாரக் கம்பங்கள் அந்த அளவுக்கு தரமற்றவையாக உள்ளன. வழக்கமாக கான்க்ரீட் மின்கம்பம் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் கம்பியின் தடிமன் குறைந்தது ஒரு செ.மீ விட்டம் இருக்க வேண்டும். ஆனால், உடைந்து விழுந்த மின்கம்பத்தில் பயன்படுத்தப்பட்ட கம்பியின் தடிமன் அதில் பாதியளவுக்குக் கூட இல்லை. அதனால் தான் சராசரியாக 60 கிலோ எடை கொண்ட இரண்டு தொழிலாளர்களைக் கூட தாங்க முடியாமல் அந்த மின் கம்பம் உடைந்து விழுந்து விட்டது. அதிலிருந்தே அந்த மின் கம்பம் எந்த அளவுக்கு தரமில்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

Pmk anbumani ramadoss letter to tamilnadu govt about tneb workers situation

சிவகாசியில் உடைந்தது மட்டும் தான் தரமற்ற மின்கம்பம் என்று கூறி விட முடியாது. தென்காசி, திருவில்லிபுத்தூர் என பல இடங்களில் இதேபோல் மின்கம்பங்கள் உடைந்துள்ளன. பல இடங்களில் மின் கம்பங்களை சரக்குந்துகளில் இருந்து தரையில் இறக்கி வைக்கும் போதே உடைந்த நிகழ்வுகளும் உண்டு. இத்தகைய மின்கம்பங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் எந்த நேரமும் விபத்துக்கு உள்ளாக நேரிடும். 

மின் இணைப்பு வழங்கப்பட்ட பிறகு மின்கம்பம் உடைந்தால் பல உயிர்கள் பலியாக நேரிடும். இத்தகைய ஆபத்துகளைத் தடுக்க, சிவகாசியில் உடைந்த மின்கம்பத்தை தயாரித்தவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட மின்கம்பங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் அண்மைக்காலங்களில் தயாரிக்கப்பட்ட மின்கம்பங்களை தர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். தரமற்ற மின் கம்பங்களை தயாரித்த நிறுவனங்கள் எவை? தரமற்ற மின்கம்பங்கள் என்று தெரிந்தும் அவற்றை கொள்முதல் செய்ய அனுமதித்தவர்கள் யார்? அவ்வாறு செய்ய அவர்களுக்கு ஏதேனும் அழுத்தம் தரப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும்; அதன் நிறைவில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்’ என்று தமிழக அரசுக்கு  கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios