தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்டுகள், முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி என்று கிட்டத்தட்ட எப்பவோ முடிவாகிவிட்டது. அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் பி.ஜே.பி. கத்தியை காட்டி இழுக்கிறது. இது போக கேப்டனும், ராமதாஸும் இருக்கிறாங்கன்னு ஒரு நாளும், இல்லவே இல்லைன்னு மறுநாளும் சேதி கேட்குது. 

விஜயகாந்தின் சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருக்கும் பிரேமலதா, சென்னையில் தரையிறங்கும்போதே நல்ல கூட்டணி சேதியுடன் தான் இறங்கவேண்டும் என்று பிரயாசப்பட்டார். ஆனால் அது கைகூடுவது தள்ளிப் போகிறது. அதேநிலைதான் ராமதாஸுக்கும். வழக்கம்போல் மாடல் பட்ஜெட்டெல்லாம் போட்டுப் பார்த்தும் எதுவும் மாட்டமாட்டேங்குது  தூண்டிலி. 

இந்த சூழலில், பா.ம.க. அங்கே போகுது, அது இங்கே சேருது, அந்த கூட்டணியை மருத்துவர் விரும்பலை, இந்த கூட்டணியில் அன்புமணிக்கு இஷ்டமில்லை, அவரு அந்த கூட்டணியில் இருக்குறப்ப டாக்டர் எப்படி அங்கே உட்கார முடியும்? இவரு இந்த கூட்டணியில் இருக்கிறதாலே அன்புமணி எப்படி அணுசரிக்க முடியும்?...என்று தினமும் ஒரு செய்தி தடதடக்கிறது. இவற்றின் உச்சமாக, பா.ம.க.வுக்கு ஆகவே ஆகாத விடுதலை சிறுத்தைகள் இருக்கும் கூட்டணியிலும் பா.ம.க. இடம் தேடுகிறது! என்று வேறு எழுதிவைக்கின்றன சில மீடியாக்கள். இதெல்லாம் ராமதாஸை கன்னாபின்னாவென ரவுசாக்குகின்றன. 

அதிலும், ‘ராமதாஸ் என்னை காவு கொடுக்க பார்த்ததை ஒருநாளும் மறக்க மாட்டேன்.’ என்றெல்லாம் திருமாவளவன் ரியாக்ட் செய்திருப்பதை பா.ம.க.வால் ஜீரணிக்கவே முடியவில்லை. நிலைமை உச்சம் கடந்து போவதை உணர்ந்த அன்புமணி இப்போது இப்படி பேசியிருக்கிறார்....“தேர்தல் கூட்டணி குறித்து எங்கள் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் அதற்குள் சில நாளிதழ்கள், ஊடகங்கள், வார இதழ்கள் அரசியல் கட்சிகளின் தரகர்களாக செயல்பட்டு, கூட்டணி குறித்து தாங்களாகவே செய்தி வெளியிடுகின்றார்கள். 

எங்களது கூட்டணி முடிவு பற்றி செய்தி வெளியிடும் முன்பாக, எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.” என்று....”ம்முடியலப்பா உங்க ரவுசு. ஏடாகூடமாக எழுதி வெச்சு எங்க வாய்ப்பை கெடுக்காதீங்க.” எனும் ரேஞ்சுக்கு புலம்பிக் கொட்டிவிட்டார். அன்புமணி இப்படி புலம்பிக் கொந்தளிக்க காரணம், பா.ம.க. ஏதாவது ஒரு கூட்டணியை நோக்கி முன்னேறினால், அதை ஸ்மெல் செய்து, அவர்கள் பா.ம.க.வை இணைத்துக் கொண்டால் இந்தயிந்த பிரச்னைகள் எல்லாம் உருவாகும், பா.ம.க.வின் பலவீனங்கள் இதுயிது என்றெல்லாம் கசமுசாவென எழுதித்தள்ளுகிறார்களாம். இதனால் தங்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள பல கட்சிகளும் பயப்படுவதாக பா.ம.க.வினர் புலம்புகின்றனர். அதன் வெளிப்பாடே அன்புமணியின் ஆதங்கமாம்! பாவம்யா, கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்க!