பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை(25ம் தேதி) புதுச்சேரி மற்றும் தமிழகத்திற்கு வந்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து புதுச்சேரிக்கு சென்று புதுச்சேரியில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்ததுடன், புதிய திட்டங்களுக்கான அடிக்கல்லையும் நாட்டினார்.

புதுச்சேரியிலிருந்து கோவை சென்ற பிரதமர் மோடி,  தமிழகத்திற்கான பல்வேறு நலத்திட்டங்களை திறந்துவைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.  கோவை கொடிசியா மைதானத்தில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்டு எழுச்சியுரையாற்றினார் பிரதமர் மோடி.

தனது பிசியான பணிகளுக்கு இடையேயும், உயர்ந்தோரை மதிக்கவும் தவறவில்லை பிரதமர் மோடி. அப்படி பிரதமர் மோடியின் இன்றைய ஒரு சந்திப்பின் புகைப்படம் தான் வைரல். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த 105 வயதான பாப்பம்மாள் என்ற மூதாட்டி, கடந்த 30 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து ஆரோக்கியமான உணவு பொருட்களை உற்பத்தி செய்து உண்டு ஆரோக்கியமான வாழ்வு வாழ்ந்துவருகிறார். அவசரமான உலகில், துரித உணவுகளை உண்டு வியாதிகளுக்கு உள்ளாகும் மனிதகுலத்தில், இயற்கை விவசாயம் செய்து 105 வயதிலும் ஆரோக்கியத்துடன் வாழும் பாப்பம்மாள் பாட்டிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்திருந்தது மத்திய அரசு.

அந்த 105 வயது பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டியை நேரில் சந்தித்தார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி இதுமாதிரியான நெகிழ்ச்சியான நிகழ்வுகளை நிகழ்த்த தவறுவதேயில்லை. அந்தவகையில், பாஜக தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் ஆகியோரையும் ஆட்சியாளர்களையும் சந்தித்துவிட்டு சென்றுவிடாமல், பாப்பம்மாள் பாட்டியை நேரில் சந்தித்து அவருக்கு சர்ப்ரைஸும் மகிழ்ச்சியும் அளித்தார் பிரதமர் மோடி. 

பாப்பம்மாள் பாட்டியின் கைகளை பிடித்து பணிவுடன் வணங்கிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, அந்த சந்திப்பு குறித்த மகிழ்ச்சியை பிரதமர் மோடி வெளிப்படுத்த, அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது.