சசிகலாவை பழிவாங்கியும், அவர்கள் உருவாக்கிக் கொடுத்த ஆட்சியை கைக்கூலியாக பயன்படுத்தும் நீங்கள், ஒட்டுமொத்த இந்தியாவில் டெபாசிட்-ஐ இழக்கப் போகிறீர்கள் என்று எம்.எல்.ஏ. கருணாஸ், பாஜகா குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். திருவாடனை எம்.எல்.ஏ. கருணாசை, டிடிவி தினகரன் ஆதரவாளரான அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி, சென்னை சாலிகிராமத்தில் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

 

இதன் பின்னர், செய்தியாளர்களை கருணாசும், ரத்தின சபாபதியும் கூட்டாக சந்தித்தனர். அப்போது பேசிய ரத்தினசபாபதி, சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருவர், டிடிவி தினகரன் ஒருமையில் பேசியபோது, எதிர்த்த எம்.எல்.ஏ.க்களில் கருணாஸ் ஒருவர். இதையெல்லாம் மனதில் வைத்துத்தான், அரசு இவரை பழி வாங்குகிறார்கள் என்றார். கருணாஸ் மீது ஒரு துரும்பு விழுந்தாலும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். சசிகலா மட்டுமல்ல, கருணாசும் இந்த ஆட்சி அமைக்க காரணமாக இருந்தவர். ஆனால் ஆட்சியாளர்கள் நன்றி என்ற மூன்றெழுத்தை மறந்து விட்டனர்.

 

நாங்கள் எதையும் சந்திக்க தயாராக வந்தவர்கள். கருணாசை அச்சுறுத்தல் மூலமாகவோ, மிரட்டல் மூலமாகவே அடிபணிய வைத்துவிட முடியாது. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், அதை எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டவர் கருணாஸ் என்று ரத்தினசபாபதி கூறினார். இதன் பின்னர் பேசிய கருணாஸ், அம்மாவின் ஆட்சி கலையக் கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் வெளியேறினோம். சட்டமன்றத்தில் அதிமுகவுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 பேர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஓ.பி.எஸ்.-க்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்துள்ளார்கள். 

இதையெல்லாம் யார் சொல்லி செய்கிறீர்கள்... மோடியின் ஆலோசனையின்படிதான் உங்களது நடவடிக்கை இருக்கிறது. சசிகலாவை பழிவாங்கி, அவர்கள் உருவாக்கி கொடுத்த இந்த ஆட்சியை உங்கள் கைக்கூலியாக வைத்துக் கொண்டு செயல்படுகிறீர்கள். ஒட்டு மொத்த இந்தியாவில் பாஜகவுக்கு டெபாசிட் போகப்போகிறது. இதனை ஒட்டுமொத்த இந்தியாவே பார்த்துக் கொண்டிருக்கிறது. இது பிரதமர் செய்யும் வேலையா? அம்மாவுக்காகத்தான் ஓட்டளித்தார்கள். 

எனக்காக எல்லாம் ஓட்டுப் போடவில்லை. இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போட்டாங்க. துரதிருஷ்டவசமாக அவர்கள் காலமாகிட்டாங்க. அந்த ஆட்சி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதனை சசிகலா  உருவாக்கி கொடுத்து விட்டு போயுள்ளார். நம்பிக்கைத் துரோகத்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அந்த நம்பிக்கைத் துரோகத்தை எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக செய்துள்ளார்கள். அப்போது கூவத்தூருக்காக நான் தேவைப்பட்டேன். என் மீது கைது நடவடிக்கை எடுக்கிறீர்கள்.