நான் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொன்னால், மம்தா பானர்ஜி என்னை சிறையில் தள்ள முடியுமா என்று அதிரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
மேற்கு வங்களத்தில் பிரதமர் மோடிக்கும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே வார்த்தைப் போர் நடைபெற்றுவருகிறது. இருவரும் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கி பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மம்தா பானர்ஜி பிரசாரத்துக்கு சென்ற வழியில் சிலர் ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட்டார்கள். இதனால் கோபமடைந்த மம்தா பானர்ஜி, உடனடியாக காரிலிருந்து கோஷமிட்டர்களை அழைத்தார். ஆனால், அவர்கள் பயந்து ஓடிவிட்டார்கள். 


இந்த விவகாரம் அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. தற்போது இந்த விவகாரத்தை விவாதப் பொருளாக்கி பிரதமர் நரேந்திர மோடி மம்தா பானர்ஜியை விமர்சனம் செய்திருக்கிறார். மேற்கு வங்காளம் மாநிலம் ஜார்கிராமில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்த விவகாரத்தைத் தொட்டு பேசினார்.
 “‘ஜெய் ஸ்ரீராம்’ என்று உச்சரிப்பவர்களைக்கூட மம்தா பானர்ஜி சிறையில் தள்ளுகிறார். நான் இன்று இங்கே ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொன்னால், மம்தாவால் என்னை சிறையில் தள்ள முடியுமா? தான் பிரதமர் ஆவதற்காக மம்தா பானர்ஜி மகா கூட்டணியை நம்பிக்கொண்டிருக்கிறார். ஆனால், அவருடைய பிரதமர் கனவு ஏற்கனவே பொய்த்துபோய்விட்டது. மம்தாவால் மேற்கு வங்காளத்தில் 10 தொகுதிகளில்கூட வெற்றி பெற முடியாது” என்று மோடி பேசினார்.
இந்த விமர்சனத்துக்கு முன்பாக ஃபானி புயல் தொடர்பாக மம்தா பானர்ஜியுடன் டெலிபோனில் பேசுவதற்கு பிரதமர் மோடி முயற்சி செய்ததாகவும், ஆனால், மம்தா காலாவதியான பிரதமருடன் பேச விரும்பவில்லை என வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தேர்தலை வைத்து இந்த இரு தலைவர்களுக்குமான வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.