ஜெயலலிதா பாணியில் நாளை நமதே, நாற்பதும் நமதே என தேனி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையை தொடங்கினார். 

தேனி மாவட்டம் கரிசல்பட்டிவிளக்குப் பகுதியில் நடைபெறும் பிரம்மாண்டப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க., அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். தமிழில் பேசி அவர் உரையை தொடங்கினார்.

 

அவர் பேசுகையில் இந்த மைதானத்தில் வெப்பமும், உங்கள் உற்சாகமும் அதிகமாக உள்ளது. அதிக அளவிலான மக்கள் இங்கும், சாலைகளிலும் ஏராளமானோர் திரண்டுள்ளனர். தமிழகம் ஒட்டுமொத்த குரலில் நாளை நமதே, 40ம் நமதே என கூறுவது தெரிகிறது. ஆசியால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த மண் துணிச்சலுக்கு பேர் போன பகுதி. ஏழைகளுக்காக பல நலத்திட்டங்கள் செய்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் இந்தியாவின் பெரிய தலைவர்கள். அவர்களுக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 

2014-ம் ஆண்டு நாட்டின் வளர்ச்சிக்காக உங்களுக்கு வாக்குறுதி அளித்தேன். இந்தியா தற்போது வரலாற்றில் முக்கிய இடம் பிடித்து. இதனை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் என்னை வெறுக்கிறார்கள். இந்தியாவின் வளர்ச்சியை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் தடுகின்றனர். மோடியை தோற்கடிக்க ஊழலுக்கு ஆதரவானவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். தந்தை நிதியமைச்சராக இருந்த போது மகன் நாட்டை கொள்ளையடித்தார் என ப.சிதம்பரத்தை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். 

ஏழைகளுக்கான நிதி ஆதாரத்தை அவர்கள் தங்கள் தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர். விவசாயிகளுக்காக ஏதும் செய்யாதவர்கள் இந்த பகுதி விவசாயிகளுக்காக நீலி கண்ணீர் வடிக்கிறார்கள். இது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா தொகுதி. இந்த மண்ணில் காங்கிரஸ் வேட்பாளர்கள் எதுவும் செய்ய முடியாது. இந்த மண்ணில் அவர்கள் கட்சியில் போட்டியிட ஆள் இல்லாததால் வெளி மாவட்டத்தில் இருந்து வேட்பாளரை நிறுத்தி உள்ளனர் என்றார்.